அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
akappaTTi AvAraik kANin avarinmikappaTTus semmAkkum kIzh
R. Aswathi
பொருள் / உரை
முருகா எளிய உரை
கீழ்மைக் குணம் கொண்ட ஒரு கயவன், தம்மைக் காட்டிலும் ஒழுக்கக் கேடான இழிந்த மனிதர்களைக் கண்டுவிட்டால், அவர்களை விடத் தான் கொடியவன் என்பதைக் காட்டி அதற்காக வெட்கப்படாமல் பெருமிதத்தோடு தலைக்கனம் கொள்வான்.
• கீழ் = கீழ்மைக் குணம் கொண்ட கயவன்,• அகப்பட்டி ஆவாரைக் காணின் = தம்மைக் காட்டிலும் ஒழுக்கக் கேடான கட்டுப்பாடு இல்லாத இழிந்த மனிதர்களைக் கண்டால்,• அவரின் மிகப்பட்டு = அவர்களை விடத் தாம் தீய செயல்களில் மேம்பட்டுக் காட்டி,• செம்மாக்கும் = அதற்காகத் தலைக்கனத்தோடு இறுமாப்பு அடைவான்.
மு.வரதராசன்
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
பரிமேலழகர்
கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும்.)
சாலமன் பாப்பையா
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
Meaning in English
When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smile





