Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1073

பொருட்பால்ஒழிபியல்108. கயமை

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.

tEva ranaiyar kayavar avaruntAmmEvana seytozhuka lAn

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மைக் கட்டுப்படுத்த யாருமின்றித் தாம் விரும்பியபடியெல்லாம் மனம் போன போக்கில் திரிந்து வாழ்வதால், கீழ்மக்களும் தேவர்களைப் போன்றவர்களே ஆவர் (என்று அவர்களை வள்ளுவர் எள்ளல் சுவையோடு பழித்துக் கூறுகிறார்).

• கயவர் = கீழ்மக்கள்,• தேவர் அனையர் = வானுலகத் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் ஆவார்கள்;• அவருந்தாம் = எதனால் என்றால், தேவர்களைப் போலவே தம்மைக் கட்டுப்படுத்த யாருமின்றி,• மேவன செய்து ஒழுகலான் = தாம் விரும்பிய தீய செயல்கள் அனைத்தையும் மனம் போன போக்கில் செய்து வாழ்வதால்.

மு.வரதராசன்

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

பரிமேலழகர்

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

Meaning in English

The base are as the Gods; they too Do ever what they list to do

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout