Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1070

பொருட்பால்ஒழிபியல்107. இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.

karappavark kiyAngkoLikkum kollO irappavarsollATap pOom uyir

Yuvaraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

உதவி கேட்டு நின்ற எளியவரிடம் 'இல்லை' என்று மறுத்துச் சொன்ன மாத்திரத்திலேயே, இரப்பவரின் உயிரே மான உணர்வினால் பதைபதைத்துப் பிரிந்து போகிறதே; அப்படியானால், 'இல்லை' என்று அஞ்சாமல் பொய் சொல்லும் கஞ்சர்களின் உயிர் மட்டும் போகாமல் அவர்களது உடம்பில் எங்கே போய்ப் பதுங்கி இருக்கிறதோ?

• இரப்பவர் = உதவி கேட்டு வந்த எளியவரிடம்,• சொல்லாட = 'இல்லை' என்று கொடுப்பவர் மறுத்துச் சொன்ன மாத்திரத்திலேயே,• உயிர் போஒம் = இரப்பவரின் உயிரே மான உணர்வினால் பிரிந்து போய்விடுகிறது;• கரப்பவர்க்கு = அப்படியானால் உள்ளதை மறைத்து 'இல்லை' என்று சொல்லும் கஞ்சர்களுக்கு மட்டும்,• உயிர் யாங்கு ஒளிக்கும் கொல் = அவர்களது உடம்பில் உயிர் எங்கே போய்ப் பதுங்கி இருக்குமோ தெரியவில்லை!

மு.வரதராசன்

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

பரிமேலழகர்

சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? (உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?

Meaning in English

E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help denies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout