இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
iravuLLa uLLam urukum karavuLLauLLatUum inRik keTum
Krishna Kumar Venkat
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவரிடம் சென்று கையேந்தி நிற்கும் இரத்தலின் கொடுமையை நினைத்தாலே மனம் கரைந்து உருகிப்போகும்; அப்படிப்பட்ட எளியவரைப் பார்த்த பிறகும் தம்மிடம் உள்ளதை மறைத்து 'இல்லை' என்று மறுக்கும் கஞ்சர்களின் கொடுமையை நினைத்தால், உருகும் அளவிற்குக் கூட இடமின்றி உள்ளமே அடியோடு அழிந்துபோய்விடும்.
• இரவு உள்ள = பிறர் முன் சென்று கையேந்தி நிற்கும் இரத்தலின் கொடுமையை நினைத்துப் பார்த்தால் மனம் கரைந்து உருகும்;• கரவு உள்ள = அப்படி நின்ற பின்னரும் தம்மிடம் உள்ளதை மறைத்து 'இல்லை' என்று சொல்லும் கருமிகளின் கொடுமையை நினைத்தால்,• உள்ளதூஉம் இன்றி = அந்த உருகும் அளவிற்குக் கூட மனம் மிஞ்சாமல்,• கெடும் = உள்ளமே அடியோடு அழிந்து போய்விடும்.
மு.வரதராசன்
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.
பரிமேலழகர்
இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத்தால் எம் உள்ளங் கரைந்து உருகாநிற்கும்; கரவு உள்ளதூஉம் இன்றிக் கெடும் - இனி அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லை என்றலின் கொடுமையை நினைத்தால், அவ்வுருகுமளவுதானும் இன்றிப் பொன்றிவிடும் ('இரவினை, உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு' (நாலடி.305)என்றார் பிறரும், இரவினும் கரவு கொடிது என்பதாம்.இதற்குப் பிறரெல்லாம் 'இரக்கின்றவர் உள்ளம் உருகும்'என்று உரைத்தார்.)
சாலமன் பாப்பையா
பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.
Meaning in English
The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterly





