இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
iravennum EmAppil tONi karavennumpArtAkkap pakku viTum
Vivek Karthik
பொருள் / உரை
முருகா எளிய உரை
வறுமைக் கடலைக் கடப்பதற்காக ஒருவன் ஏறியுள்ள 'இரந்து வாழ்தல்' என்னும் பாதுகாப்பற்ற பலவீனமான தோணியானது, 'உள்ளதை மறைக்கும் கஞ்சத்தனம்' என்னும் கடினமான பாறையின் மீது மோதுமானால் சுக்குநூறாகப் பிளந்து மூழ்கிவிடும்.
• இரவு என்னும் = கையேந்தி யாசித்தல் என்று சொல்லப்படுகின்ற,• ஏமாப்பு இல் தோணி = பாதுகாப்பற்ற பலவீனமான படகானது,• கரவு என்னும் = உள்ளதை மறைக்கும் கஞ்சத்தனம் என்கின்ற,• பார் தாக்க = உறுதியான பாறையின் மீது மோதினால்,• பக்குவிடும் = சுக்குநூறாகப் பிளந்து உடைந்துபோகும்.
மு.வரதராசன்
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
பரிமேலழகர்
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். (முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)
சாலமன் பாப்பையா
வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.
Meaning in English
The fragile bark of beggary Wrecked on denial's rock will lie





