இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று.
irappAn irappArai ellAm irappiRkarappAr iravanmin enRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
'வறுமையின் காரணமாக நீங்கள் பிறரிடம் கையேந்தித்தான் வாழ வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டாலும், தம்மிடம் இருப்பதை மறைத்துக் கொடுக்க மறுக்கும் கஞ்சர்களிடம் மட்டும் ஒருபோதும் கையேந்தி நிற்காதீர்கள்' என்று இரப்பவர்கள் அனைவரிடமும் நான் கையேந்திக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
• இரப்பாரை எல்லாம் இரப்பன் = வறுமையால் கையேந்தி வாழும் இரப்பவர்கள் அனைவரிடமும் நான் ஒரு வேண்டுகோளைக் கையேந்திக் கேட்கிறேன்;• இரப்பின் = 'நீங்கள் ஒருவேளை கையேந்தித்தான் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும்,• கரப்பார் இரவன்மின் என்று = தம்மிடம் உள்ளதை மறைத்துக் கொடுக்கும் மனம் இல்லாத கஞ்சர்களிடம் மட்டும் ஒருபோதும் கையேந்தாதீர்கள்' என்று கெஞ்சுகிறேன்.
மு.வரதராசன்
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
பரிமேலழகர்
இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.
Meaning in English
One thing I beg of beggars all, 'If beg ye may, Of those who hide their wealth, beg not, I pray.'





