எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு.
ezhumai ezhupiRappum uLLuvar tangkaNvizhuman tuTaittavar naTpu
SuccessKarthick
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்கு நேர்ந்த துன்பம் போக்கும் நட்பையே!உதவி செய்தவரின் தூய நட்பையே!ஏழேழு பிறவியிலும் போற்றுவாரே!சான்றோர்கள் என்றும் நினைத்துப் போற்றுவாரே!
• தங்கண் = தமக்கு நேர்ந்த• விழுமம் துடைத்தவர் = துன்பத்தைப் போக்கி உதவியவருடைய• நட்பு = தூய நட்பினை,• எழுமை = எழும்• எழுபிறப்பும் = ஏழேழு பிறவிகளிலும்• உள்ளுவர் = சான்றோர்கள் நினைத்துப் போற்றுவர்.
மு.வரதராசன்
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
பரிமேலழகர்
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். ('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)
சாலமன் பாப்பையா
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்
Meaning in English
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes





