இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
iTamellAm koLLAt takaittE iTamillAkkAlum iravollAs sAlpu
Krithikaa
பொருள் / உரை
முருகா எளிய உரை
வாழ்க்கையை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாத கொடிய வறுமை வந்த காலத்திலும், பிறரிடம் சென்று கையேந்தி யாசிக்க மனமொப்பாத ஒருவனின் உயர்ந்த மானமும் சான்றாண்மையும், உலகங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தாலும் அடங்காத எல்லையற்ற பெருமையுடையதாகும்.
• இடம் இல்லாக் காலும் = வாழ்வதற்கு எவ்வித வழியும் வசதியும் இல்லாத கொடிய வறுமைச் சூழலிலும்,• இரவு ஒல்லாச் சால்பு = பிறரிடம் சென்று கையேந்த உடன்படாத உயர்ந்த சான்றாண்மைப் பண்பானது,• இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே = இந்த உலகத்து இடங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தாலும் அடங்காத அளவற்ற பெருமையுடையதாகும்.
மு.வரதராசன்
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
பரிமேலழகர்
இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து. (அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
Meaning in English
Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth





