இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
irantum uyirvAzhtal vENTin parantukeTuka ulakiyaRRi yAn
Dr. P. Uma Maheswari
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகில் உள்ள மனிதர்களில் சிலர் பிறரிடம் கையேந்திப் பிச்சையெடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்று இந்த உலகத்தைப் படைத்தவன் விதித்திருப்பானானால், அந்தக் கொடிய படைப்பாளனும் இரப்பவர்களைப் போலவே உலகமெங்கும் அலைந்து திரிந்து கெட்டழிந்து போவானாக!
• இரந்தும் = மனிதர்கள் பிறரிடம் கையேந்திப் பிச்சை எடுத்துத்தான்,• உயிர் வாழ்தல் வேண்டின் = இவ்வுலகில் உயிர்வாழ வேண்டும் என்று,• உலகு இயற்றியான் = இந்த உலகத்தைப் படைத்த கடவுள் விதித்து இருப்பானானால்,• பரந்து கெடுக = அந்தக் கொடியவனும் இரப்பவர்களைப் போல எங்கும் அலைந்து திரிந்து கெட்டழிந்து போவானாக!
மு.வரதராசன்
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
பரிமேலழகர்
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.
Meaning in English
If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so





