கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.
karavA tuvantIyum kaNNannAr kaNNumiravAmai kOTi uRum
V. Adhvaith & V. Anirudh
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண்களைப் போன்ற ஆருயிர் நண்பர்களிடத்திலும்கூட, உதவி கேட்டு கையேந்தாமல் தன் சொந்த உழைப்பால் வாழ்வதே ஒருவனுக்குக் கோடி மடங்கு பெருமையும் நன்மையும் தருவதாகும்.
• கரவாது = தம்மிடம் உள்ளதை மறைக்காமல்,• உவந்து ஈயும் = உள்ளம் மகிழ்ந்து வாரி வழங்கும்,• கண் அன்னார் கண்ணும் = கண்களைப் போல மிகச் சிறந்த உற்ற நண்பர்களிடத்திலும் கூட,• இரவாமை = சென்று கையேந்தி உதவி கேட்காமல் தன் உழைப்பால் வாழ்வது,• கோடி உறும் = கோடி மடங்கு மேலான நன்மையைத் தருவதாகும்.
மு.வரதராசன்
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
பரிமேலழகர்
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று. (நலகுரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.
Meaning in English
Ten million-fold 'tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly give





