ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.
IvArkaN ennuNTAm tORRam irantukOLmEvAr ilAak kaTai
Neeraja Shankar
பொருள் / உரை
முருகா எளிய உரை
'எங்களுக்கு உதவி தேவை' என்று தம்மிடம் விரும்பி வந்து பெற்றுக் கொள்பவர்கள் என்று எவருமே இல்லை என்றால், பொருளை வாரி வழங்கும் கொடையாளர்களுக்கு ஈகை செய்வதன் மூலமாக உண்டாகும் அழியாத பெரும்புகழ் எவ்வாறு வெளிப்படும்?
• இரந்து கோள் மேவார் = 'எங்களுக்கு உதவி தேவை' என்று விரும்பி வந்து பெற்றுக் கொள்பவர்கள்,• இலாஅக் கடை = இந்த உலகத்தில் எவருமே இல்லாத நிலை ஏற்படுமானால்,• ஈவார்கண் = வாரி வாரி வழங்கும் கொடையாளர்களிடத்தில்,• தோற்றம் என் உண்டாம் = அவர்களது ஈகைச் சிறப்புப் புகழ் எவ்வாறு வெளிப்பட்டுத் தோன்றும்? (தோன்றாது).
மு.வரதராசன்
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
பரிமேலழகர்
இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்துகோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார் மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை. (தோற்றம் - ஆகுபெயர். மேவுவார் என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின் அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
Meaning in English
What glory will there be to men of generous soul, When none are found to love the askers' role





