Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1057

பொருட்பால்ஒழிபியல்106. இரவு

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்பது உடைத்து.

ikazhnteLLA tIvAraik kANin makizhntuLLamuLLuL uvappa tuTaittu

Abinesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

உதவி கேட்டு வந்த எளியவரை இழிவாகப் பேசாமலும் ஏளனம் செய்யாமலும் மரியாதையோடு கொடுக்கும் உயர்ந்த பண்பாளரைக் கண்டால், உதவி பெறுபவரின் மனம் அளவற்ற மகிழ்ச்சியடைந்து உள்ளத்தின் ஆழத்திற்குள்ளேயே ஆனந்தத்தால் பூரித்து நிற்கும்.

• இகழ்ந்து எள்ளாது = தம்மிடம் கேட்க வந்த எளியவரை அவமதிக்காமலும் ஏளனம் செய்து பேசாமலும்,• ஈவாரைக் காணின் = இன்முகத்தோடு வாரி வழங்கும் பண்பாளரைக் கண்டால்,• உள்ளம் மகிழ்ந்து = இரப்பவரின் மனம் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்து,• உள்ளுள் உவப்பது உடைத்து = உள்ளத்தின் ஆழத்திற்குள்ளேயே ஆனந்தக் கூத்தாடும் தன்மையைப் பெறும்.

மு.வரதராசன்

இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

பரிமேலழகர்

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலும் பெறுதும். நிரப்பு இடும்பை கெடுதலளவேயன்றி, ஐம்புலன்களானும் பேரின்பம் எய்தினாராகக் கருதலான், 'உள்ளுள் உவப்பது உடைத்து' என்றார். இவை ஐந்து பாட்டானும் அவ்விரக்கத்தக்காரது இயல்பு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

Meaning in English

If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout