Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1052

பொருட்பால்ஒழிபியல்106. இரவு

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.

inpam oruvaR kirattal irantavaitunpam uRAa varin

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• ஒருவற்கு இரத்தல் இன்பம் = ஒரு மனிதனுக்குப் பிறரிடம் உதவி கேட்டுப் பெறுவது கூட இன்பம் தரக்கூடியதே ஆகும்;• இரந்தவை = தான் இரந்து கேட்ட பொருளானது,• துன்பம் உறாஅ வரின் = கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் எவ்வித மனக்கசப்பும் துன்பமும் நேராதபடி இன்முகத்தோடு வந்து கிடைக்குமானால்.எளிய விளக்கம்:வறுமையின் போது ஒருவரிடம் உதவி கேட்டுப் பெறுவது கூட இன்பம் தருவதாகவே முடியும்; எப்போது எனில், கேட்கப்படும் பொருள் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் எந்தவித மனவருத்தமும் கசப்பும் இல்லாமல் மகிழ்ச்சியோடு கொடுக்கும்போது மட்டுமே.

மு.வரதராசன்

இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

பரிமேலழகர்

ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

Meaning in English

Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout