நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
naRporuL nankuNarntu sollinum nalkUrntArsoRporuL sOrvu paTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
அரிய நீதி நூல்களின் சிறந்த கருத்துக்களை மிக ஆழமாக ஆராய்ந்து உணர்ந்து தெளிவாக எடுத்துச் சொன்னாலும், வறுமையில் வாடும் ஏழை பேசுகிறார் என்றால் அந்தச் சொல்லின் ஆழமான கருத்தை எவரும் மதிக்காமல் பயனற்றுப் போகச் செய்துவிடுவர்.
• நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் = அரிய சிறந்த நூல் கருத்துக்களை ஆழமாக உணர்ந்து எடுத்துச் சொன்னாலும்,• நல்கூர்ந்தார் = வறுமையில் வாடும் ஏழைகள் சொன்னால்,• சொற்பொருள் = அவர்கள் பேசும் சொல்லின் அருமையான பொருளானது,• சோர்வு படும் = பிறரால் மதிக்கப்படாமல் எடுபடாமல் வீணாகிவிடும்.
மு.வரதராசன்
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
பரிமேலழகர்
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
Meaning in English
Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away





