Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1044

பொருட்பால்ஒழிபியல்105. நல்குரவு

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.

iRpiRantAr kaNNEyum inmai iLivantasoRpiRakkum sOrvu tarum

Vandhana Vijay

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயர்ந்த பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்த நல்ல மனிதர்களிடத்திலும் கூட வறுமை வந்து சேர்ந்தால், அது அவர்களின் மன உறுதியைக் குலைத்து, பிறரிடம் கையேந்தி யாசிக்கும் இழிவான சொற்களைப் பேசும் தளர்ச்சியை உண்டாக்கிவிடும்.

• இற்பிறந்தார் கண்ணேயும் = உயர்ந்த குடிப்பிறப்பில் பிறந்த நல்லவர்களிடத்திலும் கூட,• இன்மை = வறுமை வந்து சேர்ந்தால்,• இளிவந்த சொல் பிறக்கும் = 'எனக்கு உதவ வேண்டும்' என்று கையேந்தும் இழிவான சொல் பிறப்பதற்கான,• சோர்வு தரும் = மனத் தளர்ச்சியையும் பலவீனத்தையும் உண்டாக்கிவிடும்.

மு.வரதராசன்

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

பரிமேலழகர்

இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

Meaning in English

From penury will spring, 'mid even those of noble race, Oblivion that gives birth to words that bring disgrace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout