Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1043

பொருட்பால்ஒழிபியல்105. நல்குரவு

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை.

tolvaravum tOlum keTukkum tokaiyAkanalkura vennum nasai

Marshall Robinson

பொருள் / உரை

முருகா எளிய உரை

வறுமையின் கொடுமையால் உண்டாகும் தீராத பொருளாசையானது ஒருவனைப் பற்றினால், அது அவனது தொன்மையான குடும்பப் பாரம்பரியப் பெருமையையும், அவனது நற்புகழையும் மொத்தமாக ஒருசேர அழித்துவிடும்.

• நல்குரவு என்னும் நசை = வறுமையினால் ஏற்படும் தீராத பொருள் ஆசையானது,• தொல் வரவும் = ஒருவனுடைய தொன்றுதொட்டு வரும் பழமையான குடிப்பெருமையும்,• தோலும் = அவனது விழுமிய நற்புகழையும்,• தொகையாகக் கெடுக்கும் = மொத்தமாக ஒருசேர அழித்துவிடும்.

மு.வரதராசன்

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

பரிமேலழகர்

நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)

சாலமன் பாப்பையா

இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

Meaning in English

Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout