இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.
inmai enavoru pAvi maRumaiyumimmaiyum inRi varum
Suraj
பொருள் / உரை
முருகா எளிய உரை
வறுமை என்று சொல்லப்படுகின்ற கொடிய பாவி ஒருவனை வந்து அடைந்தால், பிறருக்குக் கொடுத்து உதவ முடியாமல் மறுமைக்கான புண்ணியப் பயனும் இல்லாமல், தான் அனுபவிக்க வழியின்றி இம்மை உலகத்தின் இன்பங்களும் இல்லாமல் இரண்டு உலகத்து நன்மைகளையும் இழக்கச் செய்துவிடும்.
• இன்மை என ஒரு பாவி = வறுமை என்று சொல்லப்படுகின்ற கொடிய பாவி ஒருவனைப் பற்றினால்,• மறுமையும் = அறம் செய்ய முடியாததால் மறுமை உலகத்து நற்பயனும் இல்லாமல்,• இம்மையும் இன்றி = நுகர வழியில்லாததால் இம்மை உலகத்து இன்பங்களும் இல்லாமல்,• வரும் = அவனை இரண்டிடங்களிலும் இன்பமற்றவனாக ஆக்கிவிடும்.
மு.வரதராசன்
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
பரிமேலழகர்
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.
சாலமன் பாப்பையா
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
Meaning in English
Malefactor matchless! poverty destroys This world's and the next world's joys





