Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1040

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.

ilamen Rasaii iruppAraik kANinnilamennum nallAL nakum

Porulatharam Sukumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

'எங்களிடம் ஒன்றுமில்லை; வாழ வழியில்லை' என்று புலம்பிக்கொண்டு உழைக்காமல் சோம்பேறியாக முடங்கிக் கிடப்பவர்களைப் பார்த்தால், உழைத்தால் கொட்டிக் கொடுக்கக் காத்திருக்கும் பூமித்தாய் அவர்களது அறியாமையைக் கண்டு தனக்குள் ஏளனமாகச் சிரிப்பாள்.

• இலம் என்று = 'எங்களிடம் ஒன்றுமில்லை, நாங்கள் பரம ஏழைகள்' என்று கூறி,• அசைஇ இருப்பாரைக் காணின் = உழைக்காமல் சோம்பி இருப்பவர்களைக் கண்டால்,• நிலம் என்னும் நல்லாள் = அள்ள அள்ள வளம் தரும் பூமித்தாய் என்னும் உத்தமி,• நகும் = அவர்களது மடமையைக் கண்டு தனக்குள் ஏளனமாகச் சிரிப்பாள்.

மு.வரதராசன்

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

பரிமேலழகர்

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)

சாலமன் பாப்பையா

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

Meaning in English

The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout