Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1039

பொருட்பால்ஒழிபியல்104. உழவு

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துஇல்லாளின் ஊடி விடும்.

sellAn kizhavan iruppin nilampulantillALin UTi viTum

V. Shivathmika

பொருள் / உரை

முருகா எளிய உரை

நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் தன் வயலுக்கு நேரில் சென்று பராமரிக்காமல் சோம்பேறியாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், தன் மீது அன்பு செலுத்தாத கணவனிடம் மனக்கசப்பு கொண்டு பிணங்கும் மனைவியைப் போல அந்த நிலமும் விளைச்சல் தராமல் வெறுத்துவிடும்.

• கிழவன் செல்லான் இருப்பின் = நிலத்திற்குரிய உழவன் நாள்தோறும் தன் வயலுக்குச் சென்று பார்க்காமல் சோம்பி இருப்பானானால்,• நிலம் = அந்த நிலமானது,• இல்லாளின் = அன்பு காட்டாத கணவனிடம் பிணங்கி நிற்கும் மனைவியைப் போல,• புலந்து ஊடிவிடும் = உள்ளுக்குள் வெறுத்துப் பயிரை விளைவிக்காமல் பிணங்கிக் கொள்ளும்.

மு.வரதராசன்

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

பரிமேலழகர்

கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும். (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

Meaning in English

When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout