உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேம்என் பார்க்கும் நிலை.
uzhavinAr kaimmaTangkin illai vizhaivatUumviTTEmen pArkkum nilai
Padminipriya Subramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
உழவு செய்யும் உழவரின் கைகள் உழவு செய்யாமல் சோர்ந்து முடங்கிப் போனால், 'உலகத்து ஆசைகள் அனைத்தையும் நாங்கள் துறந்துவிட்டோம்' என்று பெருமை பேசும் முனிவர்களுக்கும் துறவிகளுக்கும் கூட இந்த உலகில் நிலைத்து வாழ வழி இருக்காது.
• உழவினார் கை மடங்கின் = உழவுத் தொழில் செய்யும் உழவர்களின் கைகள் சோர்ந்து மடங்கி நிற்குமானால்,• விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் = 'உலகத்துப் பற்றுக்கள் அனைத்தையும் நாங்கள் துறந்துவிட்டோம்' என்று கூறும் துறவிகளுக்கும் கூட,• நிலை இல்லை = இவ்வுலகில் வாழ்வதற்கு வழியில்லாமல் போய்விடும்.
மு.வரதராசன்
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
பரிமேலழகர்
உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தேம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா. (உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையான் தாம் உண்டலும் இல்லறஞ்செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தேம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
Meaning in English
For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground





