பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.
palakuTai nIzhalum tangkuTaikkIzhk kANparalakuTai nIzha lavar
Kanchana NK
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெற்கதிர் விளையும் வயல் வளமும், இரப்போர்க்கு உணவளிக்கும் தண்ணருளும் கொண்ட உழவர்கள், உலகத்தில் உள்ள பல நாடுகளின் மன்னர்களுடைய ஆட்சி நிழல்களையும் தம் நாட்டு மன்னனின் குடை நிழலின் கீழ் கொண்டு வந்து நிறுத்தும் பெரும் வலிமை படைத்தவர்கள் ஆவர்.
• அலகு உடை நீழலவர் = நெற்கதிர்ச் செல்வமும் அதனால் விளைந்த தண்ணருளும் கொண்ட உழவர்கள்,• பல குடை நீழலும் = பல நாடுகளின் அரசர்களுடைய குடை நிழல்களையும்,• தம் குடைக்கீழ் காண்பர் = தம் நாட்டு மன்னனின் செங்கோல் குடை நிழலின் கீழ் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் பெற்றவராவர்.
மு.வரதராசன்
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
பரிமேலழகர்
அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்.'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.)
சாலமன் பாப்பையா
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.
Meaning in English
O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain





