Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1028

பொருட்பால்ஒழிபியல்103. குடிசெயல்வகை

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.

kuTiseyvArk killai paruvam maTiseytumAnang karutak keTum

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம் குடும்பத்தையும் சமுதாயத்தையும் உயர்த்தப் பாடுபடுவோர்க்கு 'இப்போது காலம் சரியில்லை' என்று சோம்பல் கொண்டு தள்ளிப்போட நேரமில்லை; காலத்தை எண்ணிச் சோம்பல் கொள்வதோ, வீண் கௌரவம் பார்ப்பதோ இருந்தால் அந்தக் குடும்பத்தின் முன்னேற்றமே அடியோடு கெட்டுவிடும்.

• குடி செய்வார்க்கு பருவம் இல்லை = தம் குடும்பத்தையும் சமுதாயத்தையும் உயர்த்த முயல்வோர்க்குக் கால நேரம் என்று ஒதுங்கி நிற்க இடமில்லை;• மடி செய்து = குளிர் மழை என்று சோம்பல் பட்டு,• மானம் கருத = 'நான் ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்' என்று வீண் கௌரவம் பார்த்தால்,• கெடும் = அவனது குடி அழிய நேரிடும்.

மு.வரதராசன்

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

பரிமேலழகர்

மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.)

சாலமன் பாப்பையா

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

Meaning in English

Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout