ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.
ALvinaiyum AnRa aRivum enaviraNTinnILvinaiyAn nILum kuTi
Meha Nagarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
விடாமுயற்சியும், தகுந்த ஆழ்ந்த அறிவும் ஆகிய இவ்விரண்டோடும் கூடி இடைவிடாமல் அயராது தொடர்ந்து உழைக்கும் செயலாற்றலால் ஒருவனுடைய குடும்பமும் சமுதாயமும் மேலும் மேலும் உயர்ந்து சிறப்படையும்.
• ஆள்வினையும் = தளராத விடாமுயற்சியும்,• ஆன்ற அறிவும் = சிறந்த ஆழ்ந்த அறிவும்,• என இரண்டின் = என்று சொல்லப்படும் இவ்விரண்டோடும் கூடி,• நீள்வினையால் = இடைவிடாமல் தொடர்ந்து செய்யும் சிறந்த உழைப்பினால்,• குடி நீளும் = ஒருவனுடைய குடும்பமும் சார்ந்த சமூகமும் உயர்ந்து விளங்கும்.
மு.வரதராசன்
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
பரிமேலழகர்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் - முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயாலல்; குடி நீளும் - ஒருவன் குடி உயரும். (நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு. இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
Meaning in English
The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's line





