Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1021

பொருட்பால்ஒழிபியல்103. குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.

karumam seyavoruvan kaitUvEn ennumperumaiyiR pITuTaiya til

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் குடும்பத்தையும் சார்ந்த மக்களையும் மேன்மையடையச் செய்யும் நற்செயல்களைச் செய்வதில், 'நான் சிறிதும் சோர்வடைய மாட்டேன்; ஓயாது உழைப்பேன்' என்று உறுதியோடு பாடுபடும் மனிதனின் விடாமுயற்சிப் பெருமையை விட மேம்பட்ட பெருமை இவ்வுலகில் வேறொன்றும் இல்லை.

• கருமம் செய = தன் குடும்பத்தையும் சமூகத்தையும் உயர்த்தும் கடமைகளைச் செய்வதற்கு,• ஒருவன் கைதூவேன் என்னும் = 'நான் ஒருபோதும் என் முயற்சியில் சோர்வடைய மாட்டேன்' என்று உறுதியோடு உழைக்கும்,• பெருமையின் = ஒரு மனிதனின் செயல் பெருமையைக் காட்டிலும்,• பீடு உடையது இல் = மிக உயர்ந்த பெருமை உலகத்தில் வேறொன்றும் இல்லை.

மு.வரதராசன்

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

பரிமேலழகர்

கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையின் - தன் குடிசெய்தற்பொருட்டுத் தொடங்கிய கருமம் முடியாமையின் எண்ணிய கருமம் செய்தற்கு யான் கையொழியேன் என்னும் ஆள்வினைப்பெருமை போல; ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்கு மேம்பாடுடைய பெருமை பிறிது இல்லை. ('குடி செயற்கு' என்பது அதிகாரத்தான் வந்தது. பலவகைத்தாய கருமச்செயலாற் செல்வமும் புகழும் எய்திக் குடி உயரும் ஆகலின், 'பீடுடையது இல்' என்றார். குடிசெய்தற் கருமமே நடத்தலால் 'தன் கருமஞ் செய்ய' என்றும், 'பிறர் கருமஞ் செய்ய' என்றும் உரைப்பாரும் உளர். தன் கருமமும் அதுவேயாகலானும், பிறர் ஏவல் செய்தல் தலைமை யன்மையானும் அவை உரையன்மை அறிக.)

சாலமன் பாப்பையா

வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

Meaning in English

Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout