நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.
nANakat tillAr iyakkam marappAvainANAl uyirmaruTTi aRRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனத்தில் பழிக்கு நாணுகின்ற உணர்வு இல்லாத மனிதர்கள் உலகில் நடமாடி வாழ்வது, மரத்தால் செய்யப்பட்ட பொம்மைக்குக் கயிற்றைக் கட்டி உயிருள்ளது போல ஆட்டி ஏமாற்றுவதைப் போன்ற உயிரற்ற வெறும் போலியாகும்.
• அகத்து நாண் இல்லார் இயக்கம் = உள்ளத்தில் பழிக்கு நாணும் உணர்வு இல்லாத மனிதர்கள் உலகில் நடமாடுவது,• மரப்பாவை = மரத்தால் செய்யப்பட்ட பொம்மையானது,• நாணால் = இயந்திரக் கயிற்றினால் இயக்கப்பட்டு,• உயிர் மருட்டியற்று = உயிருள்ள ஒரு மனிதனைப் போல ஆட்டி மயக்குவதைப் போன்றதாகும்.
மு.வரதராசன்
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
பரிமேலழகர்
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.
Meaning in English
'Tis as with strings a wooden puppet apes life's functions, when Those void of shame within hold intercourse with men





