குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.
kulanjsuTum koLkai pizhaippin nalanjsuTumnANinmai ninRak kaTai
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒழுக்க நெறியிலிருந்து ஒருவன் தவறினால் அது அவனுடைய குடிப்பிறப்பை மட்டுமே கெடுக்கும்; ஆனால் பழிக்கு நாணாத வெட்கமற்ற நிலை ஒருவனிடம் நிலைத்து நின்றுவிட்டால், அவனிடம் உள்ள பிறப்பு, கல்வி, குணம், செல்வம் போன்ற நன்மைகள் அனைத்தையுமே அடியோடு அழித்துவிடும்.
• கொள்கை பிழைப்பின் = ஒருவன் தன் உயர்ந்த ஒழுக்க நெறியிலிருந்து தவறினால்,• குலம் சுடும் = அத்தவறு அவனது குடும்பப் பெருமையை மட்டுமே கெடுக்கும்;• நாணின்மை நின்றக்கடை = ஆனால் பழிக்கு அஞ்சாத நாணமில்லாத நிலை அவனிடம் நிலைத்துவிட்டால்,• நலம் சுடும் = அவனிடம் உள்ள கல்வி, செல்வம், பெருமை போன்ற நன்மைகள் அனைத்தையுமே சுட்டெரித்து அழித்துவிடும்.
மு.வரதராசன்
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
பரிமேலழகர்
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.
Meaning in English
'Twill race consume if right observance fail; 'Twill every good consume if shamelessness prevail





