நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.
nANAl uyirait tuRappar uyirpporuTTAlnANtuRavAr nANAL pavar
Medha Anantuni
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாணத்தின் பெருமையை உணர்ந்து நெறி தவறாது வாழும் சான்றோர்கள், தமக்கு ஒரு பழி நேரும் சூழலில் நாணத்தைக் காப்பதற்காகத் தம் உயிரையும் தியாகம் செய்வார்களே தவிர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாணத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
• நாண் ஆள்பவர் = நாணத்தின் பெருமையை உணர்ந்து அதன்படி வாழ்கின்ற மேலோர்,• நாணால் உயிரைத் துறப்பர் = பழி நேரும் சூழ்நிலை வந்தால் நாணத்தைக் காப்பதற்காகத் தம் உயிரையும் தியாகம் செய்வார்கள்;• உயிர்ப் பொருட்டால் = உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக,• நாண் துறவார் = ஒருபோதும் நாணத்தை விட்டுவிட மாட்டார்கள்.
மு.வரதராசன்
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
பரிமேலழகர்
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்.
Meaning in English
The men of modest soul for shame would life an offering make, But ne'er abandon virtuous shame for life's dear sake





