பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு.
piRarpazhiyum tampazhiyum nANuvAr nANukkuRaipati ennum ulaku
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்கு வரும் பழியைக் கண்டு வெட்கப்பட்டு அஞ்சுவது போல, மற்றவர்க்கு வரும் பழியையும் தமக்கு வந்ததாகவே எண்ணி அஞ்சி விலகுகின்ற பெருந்தகையாளர்களை, நாணம் என்னும் உயர்ந்த குணம் நிலையாக வாழும் உறைவிடம் என்று உலகம் பாராட்டும்.
• பிறர் பழியும் = பிறர்க்கு வரக்கூடிய பழியையும்,• தம் பழியும் = தமக்கு வரக்கூடிய பழியையும்,• நாணுவார் = ஒன்றாகவே கருதி நாணி விலகுகின்ற நல்லோரை,• நாணுக்கு உறைபதி = நாணம் என்னும் நற்பண்பு நிலையாக வாழ்கின்ற உறைவிடம்,• என்னும் உலகு = என்று உலகத்தார் போற்றுவார்கள்.
மு.வரதராசன்
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.
பரிமேலழகர்
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.
Meaning in English
As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own





