Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1012

பொருட்பால்ஒழிபியல்102. நாணுடைமை

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.

UNuTai essam uyirkkellAm vERallanANuTaimai mAntar siRappu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

உணவு உண்பதும், ஆடை உடுத்துவதும், எஞ்சிய பிற உடல் தேவைகளும் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே அமைகின்றன; ஆனால் மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு என்பது பழி பாவங்களுக்கு அஞ்சி வெட்கப்படும் நாண உணர்வோடு வாழ்வதேயாகும்.

• ஊண் = உணவு உண்பதும்,• உடை = ஆடை உடுத்துவதும்,• எச்சம் = இவை தவிர மற்ற உடல் தேவைகளும்,• உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல = உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானவையே;• மாந்தர் சிறப்பு = ஆனால் மனிதர்களுக்கு மட்டுமே உரிய சிறந்த தனிப்பெருமை என்பது,• நாண் உடைமை = பழிச் செயல்களுக்கு அஞ்சி நாணும் நற்பண்பை உடையவராக வாழ்வதே ஆகும்.

மு.வரதராசன்

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

பரிமேலழகர்

ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் அவை யொழிந்தனவும் மக்களுயிர்க்கெல்லாம் பொது; மாந்தர் சிறப்பு நாண் உடைமை - நன்மக்கட்குச் சிறப்பாவது நாணுடைமையே, அவையல்ல. (ஒழிந்தன - உறக்கமும் அச்சமும் காமமும். சிறப்பு - அவ்வுயிர்களின் வேறுபாடு. 'அச்சம்' என்று பாடமோதுவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

Meaning in English

Food, clothing, and other things alike all beings own; By sense of shame the excellence of men is known

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout