அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
anporIit taRseR RaRanOkkA tITTiyaoNporuL koLvAr piRar
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• அன்பு ஒரீஇ = சுற்றத்தாரிடம் அன்பு செலுத்துவதைக் கைவிட்டு,• தன் செற்று = நல்ல உணவையும் உடைகளையும் அனுபவிக்காமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு,• அறம் நோக்காது = எளியவர்க்குக் கொடுக்கும் தர்மத்தையும் எண்ணாமல்,• ஈட்டிய ஒண்பொருள் = சேர்த்து வைத்த சிறந்த செல்வத்தை,• கொள்வார் பிறர் = அவனுக்குப் பின் சம்பந்தமில்லாத வேறு யாரோ கொண்டுபோய் அனுபவிப்பார்கள்.எளிய விளக்கம்:சுற்றத்தாரிடம் அன்பு காட்டாமல், தானும் உண்ணாமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தர்மத்தையும் நினையாமல் சேர்த்துக் குவித்த செல்வத்தை, இறுதியில் அவனுக்குத் தொடர்பில்லாத வேறு யாரோ கொண்டுபோய் அனுபவிப்பார்கள்.
மு.வரதராசன்
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.
பரிமேலழகர்
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.
Meaning in English
Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take





