அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
aRRArkkon RARRAtAn selvam mikanalampeRRAL tamiyaLmUt taRRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
வறியவர்க்கு எதுவும் தந்து உதவாத கஞ்சனின் செல்வமானது, பேரழகு வாய்ந்த ஒரு பெண் எவராலும் மணக்கப்படாமல் தனியாகவே வாழ்ந்து முதுமையடைந்து வீணாவதைப் போலப் பயனின்றிக் கழிந்து போகும்.
• அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் = ஒன்றுமில்லாத வறியவர்களுக்கு எதுவும் கொடுத்து உதவாத கஞ்சனின் செல்வமானது,• மிகநலம் பெற்றாள் = மிகுந்த அழகும் சிறந்த நற்குணங்களும் வாய்க்கப் பெற்ற ஒரு பெண்,• தமியள் மூத்தற்று = எவருக்கும் மணம் முடிக்கப்படாமல் தனிமையிலேயே இருந்து முதுமையடைந்து வீணாவதைப் போன்றதாகும்.
மு.வரதராசன்
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
பரிமேலழகர்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
Meaning in English
Like woman fair in lonelihood who aged grows, Is wealth of him on needy men who nought bestows





