ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான்.
Etam perunjselvam tAntuvvAn takkArkkonRIta liyalpilA tAn
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் செல்வத்தைத் தானும் அனுபவிக்காமல், தகுதியுடைய ஏழைகளுக்கும் நல்லோர்களுக்கும் கொடுத்து உதவும் நல்ல குணமும் இல்லாதவனிடம் உள்ள பெருஞ்செல்வமானது, அவனுக்கும் அச்செல்வத்திற்கும் ஒரு தீராத பெருநோயாகவே அமையும்.
• தான் துவ்வான் = தன் செல்வத்தைத் தானும் நுகராமல்,• தக்கார்க்கு ஒன்று ஈதல் = தகுதியுடைய நல்லோர்க்குக் கொடுத்து உதவும்,• இயல்பு இலாதான் = நற்குணமும் இல்லாதவனிடம் இருக்கும்,• பெருஞ்செல்வம் = மிகப் பெரிய செல்வமானது,• ஏதம் = அவனுக்கும் அச்செல்வத்திற்கும் உண்டான தீராத நோயேயாகும்.
மு.வரதராசன்
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
பரிமேலழகர்
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
Meaning in English
Their ample wealth is misery to men of churlish heart, Who nought themselves enjoy, and nought to worthy men impart





