Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1005

பொருட்பால்ஒழிபியல்101. நன்றியில்செல்வம்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.

koTuppatUum tuyppatUum illArk kaTukkiyakOTiyuN TAyinum il

R. Parthiban

பொருள் / உரை

முருகா எளிய உரை

தேவைப்படும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் தர்மமும், தமக்குத் தேவையானவற்றைத் தாமே நுகர்ந்து மகிழும் இன்பமும் இல்லாத கஞ்சர்களிடம் கோடி கோடியாகப் பொருள் குவிந்திருந்தாலும், அதனால் ஒரு பயனும் இல்லாததாகவே முடியும்.

• கொடுப்பதூஉம் = வறியவர்க்குக் கொடுத்து உதவும் தர்மமும்,• துய்ப்பதூஉம் = தேவையானவற்றைத் தாமே அனுபவிக்கும் இன்பமும்,• இல்லார்க்கு = இல்லாத கஞ்சர்களிடத்தில்,• அடுக்கிய கோடி உண்டாயினும் = பல கோடிக் கணக்கில் செல்வங்கள் அடுக்கடுக்காகக் குவிந்திருந்தாலும்,• இல் = அதனால் அவனுக்கோ உலகத்திற்கோ எந்தப் பயனும் இல்லாததாகவே முடியும்.

மு.வரதராசன்

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

பரிமேலழகர்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)

சாலமன் பாப்பையா

தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

Meaning in English

Amid accumulated millions they are poor, Who nothing give and nought enjoy of all they store

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout