பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு
poruLAnAm ellAmen RIyA tivaRummaruLAnAm mANAp piRappu
VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொருளினால் மட்டுமே உலகில் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று மயங்கி, பிறருக்குச் சிறிதும் ஈயாமல் கஞ்சத்தனத்தோடு பணத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் அறியாமையால், ஒருவனுக்கு எந்த நற்பயனும் தராத இழிவான பிறவியே உண்டாகும்.
• பொருளான் எல்லாம் ஆம் என்று = செல்வத்தால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று தவறாக எண்ணி,• ஈயாது = வறியவர்க்குக் கொடுத்து உதவாமல்,• இவறும் மருளான் = செல்வத்தை மட்டுமே இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் அறியாமையினால்,• மாணாப் பிறப்பு ஆம் = ஒருவனுக்கு எவ்விதப் பெருமையும் இல்லாத இழிவான பேய்ப்பிறவி உண்டாகும்.
மு.வரதராசன்
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
பரிமேலழகர்
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.
Meaning in English
Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings





