அருட்பெருஞ்  சோதி  அபயம்  அபயம் 
பொருட்பெருஞ்  சோதிப்  புணைதந்  -  திருட்பெருங்கார் 
அள்ளற்  கடல்கடத்தி  அக்கரைமேல்  ஆனந்தம் 
கொள்ளற்  கபயங்  கொடு. 
ஆரமுதம்  தந்தென்னுள்  அச்சமெலாம்  தீர்த்தருளிச் 
சீரமுத  வண்ணத்  திருவடிகண்  -  டார்வமிகப் 
பாடி  உடம்புயிரும்  பத்திவடி  வாகிக்கூத் 
தாடிக்  களிக்க  அருள். 
இடர்தொலைந்த  ஞான்றே  இனைவும்  தொலைந்த 
சுடர்கலந்த  ஞான்றே  சுகமும்  -  முடுகிஉற்ற 
தின்னே  களித்திடுதும்  என்நெஞ்சே  அம்பலவன் 
பொன்னேர்  பதத்தைப்  புகழ். 
ஈனமெலாம்  தீர்ந்தனவே  இன்பமெலாம்  எய்தினவே 
ஊனமெலாம்  கைவிட்  டொழிந்தனவே  -  ஞானமுளோர் 
போற்றும்சிற்  றம்பலத்தும்  பொன்னம்ப  லத்துநடம் 
போற்றும்  படிப்பெற்ற  போது. 
உள்ளக்  கவலையெலாம்  ஓடி  ஒழிந்தனவே 
வள்ளற்  பெருஞ்சோதி  வாய்த்தனவே  -  கள்ளக் 
கருத்தொழிய  ஞானக்  கருத்தியைந்து  நாதன் 
பொருத்தமுற்றென்  உள்ளமர்ந்த  போது. 
ஊன  உடம்பே  ஒளிஉடம்பாய்  ஓங்கிநிற்க 
ஞான  அமுதெனக்கு  நல்கியதே  -  வானப் 
பொருட்பெருஞ்  சோதிப்  பொதுவில்  விளங்கும் 
அருட்பெருஞ்  சோதி  அது. 
எல்லாம்  செயவல்லான்  எந்தையருள்  அம்பலவன் 
நல்லான்  எனக்குமிக  நன்களித்தான்  -  எல்லாரும் 
கண்டுவியக்  கின்றார்  கருணைத்  திருவமுதம் 
உண்டுவியக்  கின்றேன்  உவந்து. 
ஏசா  உலகவர்கள்  எல்லாரும்  கண்டுநிற்கத் 
தேசார்  ஒளியால்  சிறியேனை  -  வாசாம 
கோசரத்தின்  ஏற்றிக்  கொடுத்தான்  அருளமுதம் 
ஈசனத்தன்  அம்பலவ  னே. 
ஐயனெனக்  கீந்த  அதிசயத்தை  என்புகல்வேன் 
பொய்யடியேன்  குற்றம்  பொறுத்தருளி  -  வையத் 
தழியாமல்  ஓங்கும்  அருள்வடிவம்  நான்ஓர் 
மொழிஆடு  தற்கு  முனம். 
ஒப்புயர்வொன்  றில்லா  ஒருவன்  அருட்சோதி 
அப்பனெலாம்  வல்லதிரு  அம்பலத்தான்  -  இப்புவியில் 
வந்தான்  இரவி  வருதற்கு  முன்கருணை 
தந்தானென்  னுட்கலந்தான்  தான். 
ஓத  உலவா  ஒருதோழன்  தொண்டருளன் 
சாதல்  ஒழித்தென்னைத்  தானாக்கிப்  -  பூதலத்தில் 
ஐந்தொழில்செய்  என்றே  அருட்சோதிக்  கோலளித்தான் 
வெந்தொழில்போய்  நீங்க  விரைந்து. 
ஔவியந்தீர்  உள்ளத்  தறிஞரெலாம்  கண்டுவக்கச் 
செவ்வியசன்  மார்க்கம்  சிறந்தோங்க  -  ஒவ்வி 
விரைந்துவந்தென்  உட்கலந்து  மெய்யேமெய்  யாக 
நிரந்தொன்றாய்  நின்றான்  நிலத்து. 
சோதிப்  பிழம்பே  சுகவடிவே  மெய்ஞ்ஞான 
நீதிப்  பொதுவே  நிறைநிதியே  -  சோதிக் 
கடவுளே  மாயைஇரு  கன்மமிருள்  எல்லாம் 
விடவுளே  நின்று  விளங்கு. 
துன்பமெலாம்  தீர்ந்த  சுகமெல்லாம்  கைதந்த 
அன்பரெலாம்  போற்ற  அருள்நடஞ்செய்  -  இன்பன் 
அருட்பெருஞ்சிற்  சோதிதிரு  அம்பலத்தான்  வேதப் 
பொருட்பெருஞ்சித்  தென்னுட்  புகுந்து. 
தூக்கம்  கெடுத்துச்  சுகங்கொடுத்தான்  என்தனக்கே 
ஆக்கமென  ஓங்கும்பொன்  அம்பலத்தான்  -  ஏக்கமெலாம் 
நீங்கினேன்  எண்ணம்  நிரம்பினேன்  பொன்வடிவம் 
தாங்கினேன்  சத்தியமாத்  தான். 
துன்பம்  கெடுத்துச்  சுகங்கொடுத்தான்  என்தனக்கே 
அன்பகத்தில்  வாழும்சிற்  றம்பலத்தான்  -  இன்புருவம் 
தாங்கினேன்  சாகாத்  தனிவடிவம்  பெற்றொளியால் 
ஓங்கினேன்  உண்மை  உரை. 

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com