அருளோங்கு  கின்ற  தருட்பெருஞ்  சோதி  யடைந்ததென்றன் 
மருளோங்கு  றாமல்  தவிர்த்தது  நல்ல  வரமளித்தே 
பொருளோங்கி  நான்அருட்  பூமியில்  வாழப்  புரிந்ததென்றும் 
தெருளோங்க  ஓங்குவ  துத்தர  ஞான  சிதம்பரமே. 
இணைஎன்று  தான்தனக்  கேற்றது  போற்றும்  எனக்குநல்ல 
துணைஎன்று  வந்தது  சுத்தசன்  மார்க்கத்தில்  தோய்ந்ததென்னை 
அணைஎன்  றணைத்துக்கொண்  டைந்தொழில்  ஈந்த  தருளுலகில் 
திணைஐந்து  மாகிய  துத்தர  ஞான  சிதம்பரமே. 
உலகமெ  லாந்தொழ  உற்ற  தெனக்குண்மை  ஒண்மைதந்தே 
இலகஎ  லாம்படைத்  தாருயிர்  காத்தருள்  என்றதென்றும் 
கலகமி  லாச்சுத்த  சன்மார்க்க  சங்கம்  கலந்ததுபார்த் 
திலகமெ  னாநின்ற  துத்தர  ஞான  சிதம்பரமே. 
பவமே  தவிர்ப்பது  சாகா  வரமும்  பயப்பதுநல் 
தவமே  புரிந்தவர்க்  கின்பந்  தருவது  தான்தனக்கே 
உவமே  யமான  தொளிஓங்கு  கின்ற  தொளிருஞ்சுத்த 
சிவமே  நிறைகின்ற  துத்தர  ஞான  சிதம்பரமே. 
ஒத்தா  ரையும்இழிந்  தாரையும்  நேர்கண்  டுவக்கஒரு 
மித்தாரை  வாழ்விப்ப  தேற்றார்க்  கமுதம்  விளம்பிஇடு 
வித்தாரைக்  காப்பது  சித்தாடு  கின்றது  மேதினிமேல் 
செத்தாரை  மீட்கின்ற  துத்தர  ஞான  சிதம்பரமே. 
எத்தாலும்  மிக்க  தெனக்கருள்  ஈந்ததெல்  லாமும்வல்ல 
சித்தாடல்  செய்கின்ற  தெல்லா  உலகும்  செழிக்க  வைத்த 
தித்தா  ரணிக்கணி  ஆயது  வான்தொழற்  கேற்றதெங்கும் 
செத்தால்  எழுப்புவ  துத்தர  ஞான  சிதம்பரமே. 
குருநெறிக்  கேஎன்னைக்  கூட்டிக்  கொடுத்தது  கூறரிதாம் 
பெருநெறிக்  கேசென்ற  பேர்க்குக்  கிடைப்பது  பேய்உலகக் 
கருநெறிக்  கேற்றவர்  காணற்  கரியது  காட்டுகின்ற 
திருநெறிக்  கேற்கின்ற  துத்தர  ஞான  சிதம்பரமே. 
கொல்லா  நெறியது  கோடா  நிலையது  கோபமிலார் 
சொல்லால்  உவந்தது  சுத்தசன்  மார்க்கந்  துணிந்ததுல 
கெல்லாம்  அளிப்ப  திறந்தால்  எழுப்புவ  தேதம்ஒன்றும் 
செல்லா  வளத்தின  துத்தர  ஞான  சிதம்பரமே. 
காணாத  காட்சிகள்  காட்டுவிக்  கின்றது  காலமெல்லாம் 
வீணாள்  கழிப்பவர்க்  கெய்தரி  தானது  வெஞ்சினத்தால் 
கோணாத  நெஞ்சில்  குலாவிநிற்  கின்றது  கூடிநின்று 
சேணாடர்  வாழ்த்துவ  துத்தர  ஞான  சிதம்பரமே. 
சொல்வந்த  வேத  முடிமுடி  மீதில்  துலங்குவது 
கல்வந்த  நெஞ்சினர்  காணற்  கரியது  காமமிலார் 
நல்வந்  தனைசெய  நண்ணிய  பேறது  நன்றெனக்கே 
செல்வந்தந்  தாட்கொண்ட  துத்தர  ஞான  சிதம்பரமே. 
ஏகாந்த  மாகி  வெளியாய்  இருந்ததிங்  கென்னைமுன்னே 
மோகாந்த  காரத்தின்  மீட்டதென்  நெஞ்ச  முயங்கிரும்பின் 
மாகாந்த  மானது  வல்வினை  தீர்த்தெனை  வாழ்வித்தென்றன் 
தேகாந்த  நீக்கிய  துத்தர  ஞான  சிதம்பரமே. 

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com