திருவருட்பா  66. பற்றறுத்தல்

சத்தியம்  சத்தியம்  அருட்பெருஞ்  சோதித் 
தந்தைய  ரேஎனைத்  தாங்குகின்  றீரே 
உத்தமம்  ஆகும்நுந்  திருச்சமு  கத்தென் 
உடல்பொருள்  ஆவியை  உவப்புடன்  அளித்தேன் 
இத்தகை  உலகிடை  அவைக்கும்என்  தனக்கும் 
ஏதுஞ்  சுதந்தரம்  இல்லைஇங்  கினிநீர் 
எத்தகை  ஆயினும்  செய்துகொள்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
1
ஆணைநும்  ஆணைஎன்  அருட்பெருஞ்  சோதி 
ஆண்டவ  ரேதிரு  அம்பலத்  தவரே 
நாணைவிட்  டுரைக்கின்ற  வாறிது  கண்டீர் 
நாயக  ரேஉமை  நான்விட  மாட்டேன் 
கோணைஎன்  உடல்பொருள்  ஆவியும்  நுமக்கே 
கொடுத்தனன்  இனிஎன்மேல்  குறைசொல்ல  வேண்டாம் 
ஏணைநின்  றெடுத்தகைப்  பிள்ளைநான்  அன்றோ 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
2
அகத்தொன்று  புறத்தொன்று  நினைத்ததிங்  கில்லை 
அருட்பெருஞ்  சோதிஎன்  ஆண்டவ  ரேநீர் 
சகத்தென்றும்  எங்கணும்  சாட்சியாய்  நின்றீர் 
தனிப்பெருந்  தேவரீர்  திருச்சமு  கத்தே 
உகத்தென  துடல்பொருள்  ஆவியை  நுமக்கே 
ஒருமையின்  அளித்தனன்  இருமையும்  பெற்றேன் 
இகத்தன்றிப்  பரத்தினும்  எனக்கோர்பற்  றிலைகாண் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
3
தப்படி  எடுத்துக்கொண்  டுலகவர்  போலே 
சாற்றிட  மாட்டேன்நான்  சத்தியம்  சொன்னேன் 
செப்படி  வித்தைசெய்  சித்தர்என்  றோதும் 
தேவரீர்  வல்லபத்  திருச்சமு  கத்தே 
இப்படி  வான்முதல்  எங்கணும்  அறிய 
என்னுடல்  ஆதியை  ஈந்தனன்  உமக்கே 
எப்படி  ஆயினும்  செய்துகொள்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
4
தருணத்துக்  கேற்றவா  சொல்லிப்பின்  மாற்றும் 
தப்புரை  ஈதன்று  சத்தியம்  சொன்னேன் 
கருணைப்  பெருக்கினில்  கலந்தென  துள்ளே 
கனவினும்  நனவினும்  களிப்பருள்  கின்றீர் 
வருணப்  பொதுவிலும்  மாசமு  கத்தென் 
வண்பொரு  ளாதியை  நண்பொடு  கொடுத்தேன் 
இருள்நச்  சறுத்தமு  தந்தர  வல்லீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
5
வாய்மட்டில்  சொல்கின்ற  வார்த்தைஅன்  றிதுஎன் 
மனம்ஒத்துச்  சொல்லிய  வாய்மைமுக்  காலும் 
தாய்மட்டில்  அன்றிஎன்  தந்தையும்  குருவும் 
சாமியும்  ஆகிய  தனிப்பெருந்  தகையீர் 
ஆய்மட்டில்  என்னுடல்  ஆதியை  நுமக்கே 
அன்புடன்  கொடுத்தனன்  ஆண்டவ  ரேநீர் 
ஏய்மட்டில்  எப்படி  யேனுஞ்செய்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
6
தித்திக்கப்  பேசிக்  கசப்புள்ளே  காட்டும் 
திருட்டுப்பேச்  சன்றுநும்  திருவுளம்  அறியும் 
எத்திக்கும்  அறியஎன்  உடல்பொருள்  ஆவி 
என்பவை  மூன்றும்உள்  அன்பொடு  கொடுத்தேன் 
சித்திக்கு  மூலத்தைத்  தெளிவித்தென்  உள்ளே 
திருநடம்  செய்கின்ற  தேவரீர்  தாமே 
இத்திக்கில்  எப்படி  யேனுஞ்செய்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
7
புன்மார்க்கத்  துள்ளும்  புறத்தும்  வேறாகிப் 
புகன்றசொல்  அன்றுநும்  பொன்னடி  கண்ட 
சன்மார்க்க  சங்கத்துச்  சாதுக்கள்  காணச் 
சத்தியம்  சத்தியம்  சத்தியம்  சொன்னேன் 
தன்மார்க்கத்  தென்னுடல்  ஆதியை  நுமக்கே 
தந்தனன்  திருவருட்  சந்நிதி  முன்னே 
என்மார்க்கத்  தெப்படி  யேனுஞ்செய்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
8
இச்சைவே  றில்லைஇங்  கென்கருத்  தெல்லாம் 
என்னுள்  அமர்ந்தறிந்  தேஇருக்  கின்றீர் 
விச்சை  எலாம்வல்ல  நுந்திருச்  சமுக 
விண்ணப்பம்  என்னுடல்  ஆதியை  நுமக்கே 
நிச்சலும்  தந்தனன்  என்வசம்  இன்றி 
நின்றனன்  என்றனை  நீர்செய்வ  தெல்லாம் 
எச்செயல்  ஆயினும்  செய்துகொள்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
9
மன்செய்து  கொண்டசன்  மார்க்கத்தில்  இங்கே 
வான்செய்து  கொண்டது  நான்செய்து  கொண்டேன் 
முன்செய்து  கொண்டதும்  இங்ஙனங்  கண்டீர் 
மூவகை  யாம்உடல்  ஆதியை  நுமது 
பொன்செய்து  கொண்ட  பொதுவினில்  ஆடும் 
பொன்னடி  காணப்  பொருந்திக்  கொடுத்தேன் 
என்செய்து  கொண்டாலும்  செய்துகொள்  கிற்பீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
10
தெய்வங்கள்  பலபல  சிந்தைசெய்  வாரும் 
சேர்கதி  பலபல  செப்புகின்  றாரும் 
பொய்வந்த  கலைபல  புகன்றிடு  வாரும் 
பொய்ச்சம  யாதியை  மெச்சுகின்  றாரும் 
மெய்வந்த  திருவருள்  விளக்கம்ஒன்  றில்லார் 
மேல்விளை  வறிகிலர்  வீண்கழிக்  கின்றார் 
எய்வந்த  துன்பொழித்  தவர்க்கறி  வருள்வீர் 
எனைப்பள்ளி  எழுப்பிமெய்  இன்பந்தந்  தீரே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com