திருவருட்பா  64. திரு உந்தியார்

இரவு  விடிந்தது  இணையடி  வாய்த்த 
பரவி  மகிழ்ந்தேன்என்று  உந்தீபற 
பாலமுது  உண்டேன்என்று  உந்தீபற. 
1
பொழுது  விடிந்தது  பொற்பதம்  வாய்த்த 
தொழுது  மகிழ்ந்தேன்என்று  உந்தீபற 
தூயவன்  ஆனேன்என்று  உந்தீபற. 
2
தூக்கம்  தொலைந்தது  சூரியன்  தோன்றினன் 
ஏக்கம்  தவிர்ந்தேன்என்று  உந்தீபற 
இன்னமுது  உண்டேன்என்று  உந்தீபற. 
3
துன்பம்  தவிர்ந்தது  தூக்கம்  தொலைந்தது 
இன்பம்  கிடைத்ததென்று  உந்தீபற 
எண்ணம்  பலித்ததென்று  உந்தீபற. 
4
ஞானம்  உதித்தது  நாதம்  ஒலித்தது 
தீனந்  தவிர்ந்ததென்று  உந்தீபற 
சிற்சபை  கண்டேன்என்று  உந்தீபற. 
5
திரையற்று  விட்டது  செஞ்சுடர்  தோன்றிற்று 
பரைஒளி  ஓங்கிற்றென்று  உந்தீபற 
பலித்தது  பூசையென்று  உந்தீபற. 
6
உள்ளிருள்  நீங்கிற்றுஎன்  உள்ளொளி  ஓங்கிற்றுத் 
தெள்ளமுது  உண்டேன்என்று  உந்தீபற 
தித்திக்க  உண்டேன்என்று  உந்தீபற. 
7
எந்தையைக்  கண்டேன்  இடரெலாம்  நீங்கினேன் 
சிந்தை  மகிழ்ந்தேன்என்று  உந்தீபற 
சித்திகள்  பெற்றேன்என்று  உந்தீபற. 
8
தந்தையைக்  கண்டேன்நான்  சாகா  வரம்பெற்றேன் 
சிந்தை  களித்தேன்என்று  உந்தீபற 
சித்தெலாம்  வல்லேன்என்று  உந்தீபற. 
9
முத்தியைப்  பெற்றேன்அம்  முத்தியினால்  ஞான 
சித்தியை  உற்றேன்என்று  உந்தீபற 
சித்தனும்  ஆனேன்என்று  உந்தீபற. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com