திருவருட்பா  62. ஆற்ற மாட்டாமை

இப்பார்  முதல்எண்  மூர்த்தமதாய்  இலங்கும்  கருணை  எங்கோவே 
தப்பா  யினதீர்த்  தென்னையும்முன்  தடுத்தாட்  கொண்ட  தயாநிதியே 
எப்பா  லவரும்  புகழ்ந்தேத்தும்  இறைவா  எல்லாம்  வல்லோனே 
அப்பா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
1
புரைசேர்  துயரப்  புணரிமுற்றும்  கடத்தி  ஞான  பூரணமாம் 
கரைசேர்த்  தருளி  இன்னமுதக்  கடலைக்  குடிப்பித்  திடல்வேண்டும் 
உரைசேர்  மறையின்  முடிவிளங்கும்  ஒளிமா  மணியே  உடையானே 
அரைசே  அப்பா  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
2
கண்ணார்  அமுதக்  கடலேஎன்  கண்ணே  கண்ணுட்  கருமணியே 
தண்ணார்  மதியே  கதிர்பரப்பித்  தழைத்த  சுடரே  தனிக்கனலே 
எண்ணா  டரிய  பெரியஅண்டம்  எல்லாம்  நிறைந்த  அருட்சோதி 
அண்ணா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
3
பொய்யா  தென்றும்  எனதுளத்தே  பொருந்தும்  மருந்தே  புண்ணியனே 
கையார்ந்  திலங்கு  மணியேசெங்  கரும்பே  கனியே  கடையேற்குச் 
செய்யா  உதவி  செய்தபெருந்  தேவே  மூவாத்  தெள்ளமுதே 
ஐயா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
4
இத்தா  ரணியில்  என்பிழைகள்  எல்லாம்  பொறுத்த  என்குருவே 
நித்தா  சிற்றம்  பலத்தாடும்  நிருத்தா  எல்லாஞ்  செயவல்ல 
சித்தா  சித்தி  புரத்தமர்ந்த  தேவே  சித்த  சிகாமணியே 
அத்தா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
5
எம்மே  தகவும்  உடையவர்தம்  இதயத்  தமர்ந்த  இறையவனே 
இம்மே  தினியில்  எனைவருவித்  திட்ட  கருணை  எம்மானே 
நம்மே  லவர்க்கும்  அறிவரிய  நாதா  என்னை  நயந்தீன்ற 
அம்மே  அப்பா  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
6
செப்பார்  கலைகள்  மொழிந்தபொருள்  திறங்கள்  அனைத்துந்  தெரிந்துதெளிந் 
திப்பா  ரிடைநின்  புகழ்பாடு  கின்ற  பெரிய  ரின்மொழிப்பாட் 
டொப்பாச்  சிறியேன்  புன்மொழிப்பாட்  டெல்லாம்  உவந்த  உடையானே 
அப்பா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
7
துப்பார்  கனகப்  பொதுவில்நடத்  தொழிலால்  உலகத்  துயர்ஒழிக்கும் 
வைப்பாம்  இறைவா  சிவகாம  வல்லிக்  கிசைந்த  மணவாளா 
ஒப்பார்  உயர்ந்தார்  இல்லாத  ஒருவா  எல்லாம்  உடையானே 
அப்பா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
8
ஒப்பா  ருரைப்பார்  நின்பெருமைக்  கெனமா  மறைகள்  ஓலமிடும் 
துப்பார்  வண்ணச்  சுடரேமெய்ச்  சோதிப்  படிக  வண்ணத்தாய் 
வெப்பா  னவைதீர்த்  தெனக்கமுத  விருந்து  புரிதல்  வேண்டும்என்றன் 
அப்பா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
9
வெப்பார்  உள்ளக்  கலக்கமெலாம்  இற்றைப்  பொழுதே  விலக்கிஒழித் 
திப்பா  ரிடைஎன்  கருத்தின்வண்ணம்  எல்லாம்  விரைவின்  ஈந்தருள்க 
ஒப்பால்  உரைத்த  தன்றுண்மை  உரைத்தேன்  கருணை  உடையானே 
அப்பா  அரசே  இனிச்சிறிதும்  ஆற்ற  மாட்டேன்  கண்டாயே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com