திருவருட்பா  60. உலப்பில் இன்பம்

கருணாநிதி  யேஅடி  யேன்இரு  கண்ணுளானே 
தெருள்நாடும்என்  சிந்தையுள்  மேவிய  தேவதேவே 
பொருள்நாடிய  சிற்றம்ப  லத்தொளிர்  புண்ணியாமெய்த் 
தருணாஇது  தான்தரு  ணம்எனைத்  தாங்கிக்கொள்ளே. 
1
கூகாஎனக்  கூடி  எடாதிக்  கொடியனேற்கே 
சாகாவரம்  தந்த  தயாநிதித்  தந்தையேநின் 
மாகாதலன்  ஆகினன்  நான்இங்கு  வாழ்கின்றேன்என் 
யோகாதி  சயங்கள்  உரைக்க  உலப்புறாதே. 
2
எந்தாய்உனைக்  கண்டு  களித்தனன்  ஈண்டிப்போதே 
சிந்தாநல  மும்பல  மும்பெற்றுத்  தேக்குகின்றேன் 
அந்தாமரை  யான்நெடு  மாலவன்  ஆதிவானோர் 
வந்தார்எனை  வாழ்த்துகின்  றார்இங்கு  வாழ்கஎன்றே. 
3
வாழ்வேன்அரு  ளாரமு  துண்டிங்கு  வாழ்கின்றேன்நான் 
ஏழ்வேதனை  யும்தவிர்ந்  தேன்உனை  யேஅடைந்தேன் 
சூழ்வேன்திருச்  சிற்றம்பலத்தைத்  துதித்து  வாழ்த்தித் 
தாழ்வேன்அல  தியார்க்கும்  இனிச்சற்றும்  தாழ்ந்திடேனே. 
4
தாழாதெனை  ஆட்கொண்  டருளிய  தந்தையேநின் 
கேழார்மணி  அம்பலம்  போற்றக்  கிடைத்துளேன்நான் 
ஏழாநிலை  மேல்நிலை  ஏறி  இலங்குகின்றேன் 
ஊழால்வந்த  துன்பங்கள்  யாவும்  ஒழிந்ததன்றே. 
5
கோடாமறை  ஆகமம்  ஆதிய  கூறுகின்ற 
சூடாமணி  யேமணி  யுள்ஒளிர்  சோதியேஎன் 
பாடானவை  தீர்த்தருள்  ஈந்துநின்  பாதம்என்னும் 
வாடாமலர்  என்முடி  சூட்டினை  வாழிநீயே. 
6
எல்லாஞ்செய  வல்லவ  னேஎனை  ஈன்றதாயின் 
நல்லாய்சிவ  ஞானிகள்  பெற்றமெய்ஞ்  ஞானவாழ்வே 
கொல்லாநெறி  காட்டிஎன்  தன்னைக்  குறிப்பிற்கொண்டென் 
பொல்லாமை  பொறுத்தனை  வாழ்கநின்  பொற்பதமே. 
7
பரமான  சிதம்பர  ஞான  சபாபதியே 
வரமான  எல்லாம்  எனக்கீந்தநல்  வள்ளலேஎன் 
தரமானது  சற்றும்  குறித்திலை  சாமிநின்னை 
உரமானஉள்  அன்பர்கள்  ஏசுவர்  உண்மைஈதே. 
8
தாயேஎனைத்  தந்த  தயாநிதித்  தந்தையேஇந் 
நாயேன்பிழை  யாவையும்  கொண்டனை  நன்மைஎன்றே 
காயேகனி  யாகக்  கருதும்  கருத்தனேநின் 
சேயேஎன  என்பெயர்  எங்கும்  சிறந்ததன்றே. 
9
பொய்யேஉரைக்  கின்றஎன்  சொல்லும்  புனைந்துகொண்டாய் 
மெய்யேதிரு  அம்பலத்  தாடல்செய்  வித்தகனே 
எய்யேன்இனி  வெம்மலக்  கூட்டில்  இருந்தென்உள்ளம் 
நையேன்சுத்த  நல்லுடம்  பெய்தினன்  நானிலத்தே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com