திருவருட்பா  55. உபதேச உண்மை

கண்ணே  கண்மணி  யே  -  கருத்  -  தேகருத்  தின்கனி  வே 
விண்ணே  விண்ணிறை  வே  -  சிவ  -  மேதனி  மெய்ப்பொரு  ளே 
தண்ணேர்  ஒண்மதி  யே  -  எனைத்  -  தந்த  தயாநிதி  யே 
உண்ணேர்  உள்ளொளி  யே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
1
வளியே  வெண்ணெருப்  பே  -  குளிர்  -  மாமதி  யேகன  லே 
வெளியே  மெய்ப்பொரு  ளே  -  பொருள்  -  மேவிய  மேனிலை  யே 
அளியே  அற்புத  மே  -  அமு  -  தேஅறி  வேஅர  சே 
ஒளியே  உத்தம  னே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
2
அன்பே  என்னர  சே  -  திரு  -  வம்பலத்  தாரமு  தே 
என்பே  உள்ளுரு  கக்  -  கலந்  -  தென்னு  ளிருந்தவ  னே 
இன்பே  என்னறி  வே  -  பர  -  மேசிவ  மேயென  வே 
உன்பே  ரோதுகின்  றேன்  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
3
தனையா  வென்றழைத்  தே  -  அருட்  -  சத்தி  யளித்தவ  னே 
அனையா  யப்பனு  மாய்  -  எனக்  -  காரிய  னானவ  னே 
இனையா  தென்னையு  மேல்  -  நிலை  -  ஏற்றுவித்  தாண்டவ  னே 
உனையான்  ஏத்துகின்  றேன்  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
4
துப்பார்  செஞ்சுடரே  -  அருட்  -  சோதி  சுகக்கட  லே 
அப்பா  என்னர  சே  -  திரு  -  வம்பலத்  தாரமு  தே 
இப்பா  ரிற்பசிக்  கே  -  தந்த  -  இன்சுவை  நல்லுண  வே 
ஒப்பாய்  ஒப்பரி  யாய்  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
5
என்றே  யென்று  ளுறுஞ்  -  சுட  -  ரேஎனை  ஈன்றவ  னே 
நன்றே  நண்பெனக்  கே  -  மிக  -  நல்கிய  நாயக  னே 
மன்றேர்  மாமணி  யே  -  சுக  -  வாழ்க்கையின்  மெய்ப்பொரு  ளே 
ஒன்றே  யென்றுணை  யே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
6
திருவே  தெள்ளமு  தே  -  அருட்  -  சித்த  சிகாமணி  யே 
கருவே  ரற்றிட  வே  -  களை  -  கின்றவென்  கண்ணுத  லே 
மருவே  மாமல  ரே  -  மலர்  -  வாழ்கின்ற  வானவ  னாம் 
உருவே  என்குரு  வே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
7
தடையா  வுந்தவிர்த்  தே  -  எனைத்  -  தாங்கிக்கொண்  டாண்டவ  னே 
அடையா  யன்பிலர்  பால்  -  எனக்  -  கன்பொடு  தந்தபெ  ருங் 
கொடையாய்  குற்றமெ  லாங்  -  குணங்  -  கொண்டகு  ணக்குன்ற  மே 
உடையாய்  உத்தம  னே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
8
பெண்ணாய்  ஆணுரு  வாய்  -  எனைப்  -  பெற்றபெ  ருந்தகை  யே 
அண்ணா  என்னர  சே  -  திரு  -  வம்பலத்  தாடுகின்  றோய் 
எண்ணா  நாயடி  யேன்  -  களித்  -  திட்டவு  ணவையெ  லாம் 
உண்ணா  துண்டவ  னே  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
9
நந்நா  லுங்கடந்  தே  -  ஒளிர்  -  ஞானச  பாபதி  யே 
பொன்னா  ருஞ்சபை  யாய்  -  அருட்  -  பூரண  புண்ணிய  னே 
என்னால்  ஆவதொன்  றும்  -  உனக்  -  கில்லையெ  னினுமெந்  தாய் 
உன்னால்  வாழுகின்  றேன்  -  எனக்  -  குண்மை  உரைத்தரு  ளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com