திருவருட்பா  45. அச்சோப் பத்து

கருத்தனைஎன்  கண்மணியைக்  கண்ணுதலைப் 
பெருங்கருணைக்  கடலை  வேதத் 
திருத்தனைஎன்  சிவபதியைத்  தீங்கனியைத் 
தெள்ளமுதத்  தெளிவை  வானில் 
ஒருத்தனைஎன்  உயிர்த்துணையை  உயிர்க்குயிரை 
உயிர்க்குணர்வை  உணர்த்த  னாதி 
அருத்தனைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
1
மெய்யனைஎன்  துயர்தவிர்த்த  விமலனைஎன் 
இதயத்தே  விளங்கு  கின்ற 
துய்யனைமெய்த்  துணைவனைவான்  துரியநிலைத் 
தலைவனைச்சிற்  சுகந்தந்  தானைச் 
செய்யனைவெண்  நிறத்தனைஎன்  சிவபதியை 
ஒன்றான  தெய்வந்  தன்னை 
அய்யனைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
2
எப்பொருளும்  எவ்வுயிரும்  எவ்வுலகும் 
விளங்கவிளக்  கிடுவான்  தன்னைச் 
செப்பரிய  பெரியஒரு  சிவபதியைச் 
சிவகதியைச்  சிவபோ  கத்தைத் 
துப்புரவு  பெறஎனக்கே  அருளமுதம் 
துணிந்தளித்த  துணையை  என்றன் 
அப்பனைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
3
பிறிவெனைத்துந்  தோற்றாதென்  உளங்கலந்த 
பெருந்தகைஎம்  பெருமான்  தன்னைச் 
செறிவனைத்தும்  என்மனத்துக்  களித்தெனக்குப் 
பெருங்களிப்புச்  செய்தான்  தன்னை 
முறிவெனைத்தும்  இன்றிஅருள்  அமுதுணவு 
கொடுத்தெனக்கு  முன்னின்  றானை 
அறிவனைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
4
பொன்புனைஉள்  ளொளிக்கொளியைப்  பூரணமாம் 
பெரும்பொருளைப்  புனிதந்  தன்னை 
என்பிழையைப்  பொறுத்தெனையும்  ஏன்றுகொண்ட 
பெருங்கருணை  இயற்கை  தன்னை 
இன்பினைஎன்  இதயத்தே  இருந்தருளும் 
பெருவாழ்வை  என்னுள்  ஓங்கும் 
அன்பினைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
5
இத்தனைஎன்  றிடமுடியாச்  சத்திஎலாம் 
உடையானை  எல்லாம்  வல்ல 
சித்தனைஎன்  சிவபதியைத்  தெய்வமெலாம் 
விரித்தடக்கும்  தெய்வந்  தன்னை 
எத்தனையும்  என்பிழைகள்  பொறுத்ததனிப் 
பெருந்தாயை  என்னை  ஈன்ற 
அத்தனைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
6
எம்மையும்என்  தனைப்பிரியா  தென்னுளமே 
இடங்கொண்ட  இறைவன்  தன்னை 
இம்மையில்என்  தனக்கழியாத்  திருவடிவம் 
தந்தானை  எல்லாம்  வல்ல 
செம்மைதரு  சித்தனைஎன்  சிவபதியைத் 
தெள்ளமுதத்  திரளை  என்றன் 
அம்மையைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
7
என்னையும்என்  பொருளையும்என்  ஆவியையும் 
தான்கொண்டிங்  கென்பால்  அன்பால் 
தன்னையும்தன்  பொருளையும்தன்  ஆவியையும் 
களித்தளித்த  தலைவன்  தன்னை 
முன்னையும்பின்  னையும்எனக்கே  முழுத்துணையாய் 
இருந்தமுழு  முதல்வன்  தன்னை 
அன்னையைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
8
எண்ணலைவே  றிரங்கலைநின்  எண்ணமெலாம் 
தருகின்றோம்  இன்னே  என்றென் 
கண்நிரம்ப  ஒளிகாட்டிக்  கருத்தில்அமர்ந் 
திருக்கின்ற  கருத்தன்  தன்னைப் 
புண்ணியனை  உளத்தூறும்  புத்தமுதை 
மெய்இன்பப்  பொருளை  என்றன் 
அண்ணலைசிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
9
சாதியைநீள்  சமயத்தை  மதத்தைஎலாம் 
விடுவித்தென்  தன்னை  ஞான 
நீதியிலே  சுத்தசிவ  சன்மார்க்க 
நிலைதனிலே  நிறுத்தி  னானைப் 
பாதியைஒன்  றானவனைப்  பரம்பரனைப் 
பராபரனைப்  பதிஅ  னாதி 
ஆதியைச்சிற்  றம்பலத்தென்  அருட்பெருஞ்சோ 
தியைப்பெற்றேன்  அச்சோ  அச்சோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com