திருவருட்பா  40. கண்கொளாக் காட்சி

அடுத்தானை  அடியேனை  அஞ்சேல்  என்றிங் 
காண்டானைச்  சிறுநெறிகள்  அடையா  தென்னைத் 
தடுத்தானைப்  பெருநெறிக்குத்  தடைதீர்த்  தானைத் 
தன்னருளும்  தன்பொருளும்  தானே  என்பால் 
கொடுத்தானைக்  குற்றமெலாம்  குணமாக்  கொள்ளும் 
குணத்தானைச்  சமயமதக்  குழிநின்  றென்னை 
எடுத்தானை  எல்லாஞ்செய்  வல்ல  சித்தே 
ஈந்தானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
1
விரித்தானைக்  கருவிஎலாம்  விரிய  வேதம் 
விதித்தானை  மெய்ந்நெறியை  மெய்யே  எற்குத் 
தெரித்தானை  நடம்பொதுவில்  செய்கின்  றானைச் 
சிறியேனுக்  கருள்ஒளியால்  சிறந்த  பட்டம் 
தரித்தானைத்  தானேநா  னாகி  என்றும் 
தழைத்தானை  எனைத்தடுத்த  தடைகள்  எல்லாம் 
எரித்தானை  என்உயிருக்  கின்பா  னானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
2
நட்டானை  நட்டஎனை  நயந்து  கொண்டே 
நம்மகன்நீ  அஞ்சல்என  நவின்றென்  சென்னி 
தொட்டானை  எட்டிரண்டும்  சொல்லி  னானைத் 
துன்பமெலாம்  தொலைத்தானைச்  சோர்ந்து  தூங்க 
ஒட்டானை  மெய்அறிவே  உருவாய்  என்னுள் 
உற்றானை  உணர்ந்தார்க்கும்  உணர்ந்து  கொள்ள 
எட்டானை  என்னளவில்  எட்டி  னானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
3
சோற்றானைச்  சோற்றில்உறும்  சுகத்தி  னானைத் 
துளக்கம்இலாப்  பாரானை  நீரா  னானைக் 
காற்றானை  வெளியானைக்  கனலா  னானைக் 
கருணைநெடுங்  கடலானைக்  களங்கர்  காணத் 
தோற்றானை  நான்காணத்  தோற்றி  னானைச் 
சொல்லறியேன்  சொல்லியபுன்  சொல்லை  யெல்லாம் 
ஏற்றானை  என்னுளத்தில்  எய்தி  னானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
4
சேர்த்தானை  என்றனைத்தன்  அன்ப  ரோடு 
செறியாத  மனஞ்செறியச்  செம்பொற்  றாளில் 
ஆர்த்தானை  அம்பலத்தில்  ஆடா  நின்ற 
ஆனந்த  நடத்தானை  அருட்கண்  நோக்கம் 
பார்த்தானைப்  பாராரைப்  பாரா  தானைப் 
பார்ப்பறவே  பார்த்திருக்கப்  பண்ணி  என்னை 
ஈர்த்தானை  ஐந்தொழில்நீ  இயற்றென்  றானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
5
முளையானைச்  சுத்தசிவ  வெளியில்  தானே 
முளைத்தானை  மூவாத  முதலா  னானைக் 
களையானைக்  களங்கமெலாம்  களைவித்  தென்னைக் 
காத்தானை  என்பிழையைக்  கருதிக்  கோபம் 
விளையானைச்  சிவபோகம்  விளைவித்  தானை 
வேண்டாமை  வேண்டல்இவை  மேவி  என்றும் 
இளையானை  மூத்தானை  மூப்பி  லானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
6
புயலானை  மழையானை  அதிர்ப்பி  னானைப் 
போற்றியமின்  ஒளியானைப்  புனித  ஞானச் 
செயலானைச்  செயலெல்லாந்  திகழ்வித்  தானைத் 
திருச்சிற்றம்  பலத்தானைத்  தெளியார்  உள்ளே 
அயலானை  உறவானை  அன்பு  ளானை 
அறிந்தாரை  அறிந்தானை  அறிவால்  அன்றி 
இயலானை  எழிலானைப்  பொழிலா  னானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
7
தாயானைத்  தந்தைஎனக்  காயி  னானைச் 
சற்குருவு  மானானைத்  தமியேன்  உள்ளே 
மேயானைக்  கண்காண  விளங்கி  னானை 
மெய்ம்மைஎனக்  களித்தானை  வேதஞ்  சொன்ன 
வாயானை  வஞ்சம்இலா  மனத்தி  னானை 
வரங்கொடுக்க  வல்லானை  மணிமன்  றன்றி 
ஏயானைத்  துரியநடு  விருக்கின்  றானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
8
தழைத்தானைத்  தன்னைஒப்பார்  இல்லா  தானைத் 
தானேதா  னானானைத்  தமிய  னேனைக் 
குழைத்தானை  என்கையிலோர்  கொடைதந்  தானைக் 
குறைகொண்டு  நின்றேனைக்  குறித்து  நோக்கி 
அழைத்தானை  அருளமுதம்  அளிக்கின்  றானை 
அச்சமெலாம்  தவிர்த்தானை  அன்பே  என்பால் 
இழைத்தானை  என்னிதயத்  திருக்கின்  றானை 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
9
உடையானை  அருட்ஜோதி  உருவி  னானை 
ஓவானை  மூவானை  உலவா  இன்பக் 
கொடையானை  என்குறைதீர்த்  தென்னை  ஆண்டு 
கொண்டானைக்  கொல்லாமை  குறித்தி  டாரை 
அடையானைத்  திருசிற்றம்  பலத்தி  னானை 
அடியேனுக்  கருளமுதம்  அளிக்க  வேபின் 
இடையானை  என்னாசை  எல்லாந்  தந்த 
எம்மானைக்  கண்டுகளித்  திருக்கின்  றேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com