
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.
புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.
விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.
வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.



