திருவருட்பா  18. பணித்திறம் வேட்டல்

நண்ணேனோ  மகிழ்வினொடும்  திருத்தணிகை  மலைஅதனை  நண்ணி  என்றன் 
கண்ணேநீ  அமர்ந்தஎழில்  கண்குளிரக்  காணேனோ  கண்டு  வாரி 
உண்ணேனோ  ஆனந்தக்  கண்ர்கொண்  டாடிஉனக்  குகப்பாத்  தொண்டு 
பண்ணேனோ  நின்புகழைப்  பாடேனோ  வாயாரப்  பாவி  யேனே. 
1
பாவியேன்  படுந்துயருக்  கிரங்கிஅருள்  தணிகையில்என்  பால்வா  என்று 
கூவிநீ  ஆட்கொளஓர்  கனவேனும்  காணேனோ  குணப்பொற்  குன்றே 
ஆவியே  அறிவேஎன்  அன்பேஎன்  அரசேநின்  அடியைச்  சற்றும் 
சேவியேன்  எனினும்எனைக்  கைவிடேல்  அன்பர்பழி  செப்பு  வாரே. 
2
வாரேனோ  திருத்தணிகை  வழிநோக்கி  வந்தென்கண்  மணியே  நின்று 
பாரேனோ  நின்அழகைப்  பார்த்துலக  வாழ்க்கைதனில்  படும்இச்  சோபம் 
தீரேனோ  நின்அடியைச்  சேவித்தா  னந்தவெள்ளம்  திளைத்தா  டேனோ 
சாரேனோ  நின்அடியர்  சமுகம்அதைச்  சார்ந்தவர்தாள்  தலைக்கொள்  ளேனோ. 
3
கொள்ளேனோ  நீஅமர்ந்த  தணிகைமலைக்  குறஎண்ணம்  கோவே  வந்தே 
அள்ளேனோ  நின்அருளை  அள்ளிஉண்டே  ஆனந்தத்  தழுந்தி  ஆடித் 
துள்ளேனோ  நின்தாளைத்  துதியேனோ  துதித்துலகத்  தொடர்பை  எல்லாம் 
தள்ளேனோ  நின்அடிக்கீழ்ச்  சாரேனோ  துணைஇல்லாத்  தனிய  னேனே. 
4
தனியேஇங்  குழல்கின்ற  பாவியேன்  திருத்தணிகா  சலம்வாழ்  ஞானக் 
கனியேநின்  சேவடியைக்  கண்ஆரக்  கண்டுமனம்  களிப்பு  றேனோ 
துனியேசெய்  வாழ்வில்அலைந்  தென்எண்ணம்  முடியாது  சுழல்வேன்  ஆகில் 
இனிஏது  செய்வேன்மற்  றொருதுணையும்  காணேன்இவ்  வேழை  யேனே. 
5
இவ்வேளை  அருள்தணிகை  அமர்ந்தருளும்  தேவைஎன  திருகண்  ஆய 
செவ்வேளை  மனங்களிப்பச்  சென்றுபுகழ்ந்  தானந்தத்  தெளிதேன்உண்டே 
எவ்வேளை  யும்பரவி  ஏத்தேனோ  அவன்பணிகள்  இயற்றி  டேனோ 
தெவ்வேளை  அடர்க்கவகை  தெரியாமல்  உழல்தருமிச்  சிறிய  னேனே. 
6
சிறியேன்இப்  போதேகித்  திருத்தணிகை  மலைஅமர்ந்த  தேவின்  பாதம் 
குறியேனோ  ஆனந்தக்  கூத்தாடி  அன்பர்கள்தம்  குழாத்துள்  சென்றே 
அறியேனோ  பொருள்நிலையை  அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை 
முறியேனோ  உடல்புளகம்  மூடேனோ  நன்னெறியை  முன்னி  இன்றே. 
7
முன்னேனோ  திருத்தணிகை  அடைந்திடநின்  சந்நிதியின்  முன்னே  நின்று 
மன்னேனோ  அடியருடன்  வாழேனோ  நின்அடியை  வாழ்த்தி  டேனோ 
உன்னேனோ  நன்னிலையை  உலகத்தோர்  எல்லீரும்  உங்கே  வாரும் 
என்னேனோ  நின்பெயரை  யார்கூறி  னாலும்அவர்க்  கிதங்கூ  றேனோ. 
8
கூறேனோ  திருத்தணிகைக்  குற்றுன்அடிப்  புகழதனைக்  கூறி  நெஞ்சம் 
தேறேனோ  நின்அடியர்  திருச்சமுகம்  சேரேனோ  தீராத்  துன்பம் 
ஆறேனோ  நின்அடியன்  ஆகேனோ  பவக்கடல்விட்  டகன்றே  அப்பால் 
ஏறேனோ  அருட்கடலில்  இழியேனோ  ஒழியாத  இன்பம்  ஆர்ந்தே. 
9
தேடேனோ  என்நாதன்  எங்குற்றான்  எனஓடித்  தேடிச்  சென்றே 
நாடேனோ  தணிகைதனில்  நாயகனே  நின்அழகை  நாடி  நாடிக் 
கூடேனோ  அடியருடன்  கோவேஎம்  குகனேஎம்  குருவே  என்று 
பாடேனோ  ஆனந்தப்  பரவசம்உற்  றுன்கமலப்  பதம்நண்  ணேனோ. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com