திருவருட்பா  10. ஆற்றா முறை

விண்அ  றாதுவாழ்  வேந்தன்  ஆதியர் 
வேண்டி  ஏங்கவும்  விட்டென்  நெஞ்சகக் 
கண்அ  றாதுநீ  கலந்து  நிற்பதைக் 
கள்ள  நாயினேன்  கண்டு  கொண்டிலேன் 
எண்அ  றாத்துயர்க்  கடலுள்  மூழ்கியே 
இயங்கி  மாழ்குவேன்  யாது  செய்குவேன் 
தண்அ  ற்‘ப்பொழில்  குலவும்  போரி  வாழ் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
1
வாட்கண்  ஏழையர்  மயலில்  பட்டகம் 
மயங்கி  மால்அயன்  வழுத்தும்  நின்திருத் 
தாட்கண்  நேயம்அற்  றுலக  வாழ்க்கையில் 
சஞ்ச  ரித்துழல்  வஞ்ச  னேன்இடம் 
ஆட்க  ணேசுழல்  அந்த  கன்வரில் 
அஞ்சு  வேன்அலால்  யாது  செய்குவேன் 
நாட்க  ணேர்மலர்ப்  பொழில்கொள்  போரிவாழ் 
நாய  காதிருத்  தணிகை  நாதனே. 
2
எண்ணில்  புன்தொழில்  எய்தி  ஐயவோ 
இயல்பின்  வாழ்க்கையில்  இயங்கி  மாழ்கியே 
கண்ணின்  உண்மணி  யாய  நின்தனைக் 
கருதி  டாதுழல்  கபட  னேற்கருள் 
நண்ணி  வந்திவன்  ஏழை  யாம்என 
நல்கி  ஆண்டிடல்  நியாய  மேசொலாய் 
தண்இ  ரும்பொழில்  சூழும்  போரிவாழ் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
3
கூவி  ஏழையர்  குறைகள்  தீரஆட் 
கொள்ளும்  வள்ளலே  குறுகும்  வாழ்க்கையில் 
பாவி  யேன்படும்  பாட  னைத்தையும் 
பார்த்தி  ருந்தும்நீ  பரிந்து  வந்திலாய் 
சேவி  யேன்  எனில்  தள்ளல்  நீதியோ 
திருவ  ருட்கொரு  சிந்து  வல்லையோ 
தாவி  ஏர்வளைப்  பயில்செய்  போரிவாழ் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
4
சந்தை  நேர்நடை  தன்னில்  ஏங்குவேன் 
சாமி  நின்திருத்  தாளுக்  கன்பிலேன் 
எந்தை  நீமகிழ்ந்  தென்னை  ஆள்வையேல் 
என்னை  அன்பர்கள்  என்சொல்  வார்களோ 
நிந்தை  ஏற்பினும்  கருணை  செய்திடல் 
நித்த  நின்அருள்  நீதி  ஆகுமால் 
தந்தை  தாய்என  வந்து  சீர்தரும் 
தலைவ  னேதிருத்  தணிகை  நாதனே. 
5
செல்லும்  வாழ்க்கையில்  தியங்க  விட்டுநின் 
செய்ய  தாள்துதி  செய்தி  டாதுழல் 
கல்லும்  வெந்நிடக்  கண்டு  மிண்டுசெய் 
கள்ள  நெஞ்சினேன்  கவலை  தீர்ப்பையோ 
சொல்லும்  இன்பவான்  சோதி  யேஅருள் 
தோற்ற  மேசுக  சொருப  வள்ளலே 
சல்லி  யங்கெட  அருள்செய்  போரிவாழ் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
6
ஏது  செய்குவ  னேனும்  என்றனை 
ஈன்ற  நீபொறுத்  திடுதல்  அல்லதை 
ஈது  செய்தவன்  என்றிவ்  வேழையை 
எந்த  வண்ணம்நீ  எண்ணி  நீக்குவாய் 
வாது  செய்வன்இப்  போது  வள்ளலே 
வறிய  னேன்என  மதித்து  நின்றிடேல் 
தாது  செய்மலர்ப்  பொழில்கொள்  போரிவாழ் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
7
பேயும்  அஞ்சுறும்  பேதை  யார்களைப் 
பேணும்  இப்பெரும்  பேய  னேற்கொரு 
தாயும்  அப்பனும்  தமரும்  நட்பும்ஆய்த் 
தண்அ  ருட்கடல்  தந்த  வள்ளலே 
நீயும்  நானும்ஓர்  பாலும்  நீருமாய் 
நிற்க  வேண்டினேன்  நீதி  ஆகுமோ 
சாயும்  வன்பவம்  தன்னை  நீக்கிடும் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
8
பொய்யர்  தம்மனம்  புகுதல்  இன்றெனப் 
புனித  நு‘லெலாம்  புகல்வ  தாதலால் 
ஐய  நின்திரு  அருட்கி  ரப்பஇங் 
கஞ்சி  நின்றென்இவ்  விஞ்சு  வஞ்சனேன் 
மெய்யர்  உள்ளுளே  விளங்கும்  சோதியே 
வித்தி  லாதவான்  விளைந்த  இன்பமே 
தைய  லார்இரு  வோரும்  மேவுதோள் 
சாமி  யேதிருத்  தணிகை  நாதனே. 
9
மாலின்  வாழ்க்கையின்  மயங்கி  நின்பதம் 
மறந்து  ழன்றிடும்  வஞ்ச  நெஞ்சினேன் 
பாலின்  நீர்என  நின்அ  டிக்கணே 
பற்றி  வாழ்ந்திடப்  பண்ணு  வாய்கொலோ 
சேலின்  வாட்கணார்  தீய  மாயையில் 
தியங்கி  நின்றிடச்  செய்கு  வாய்கொலோ 
சால  நின்உளம்  தான்எவ்  வண்ணமோ 
சாற்றி  டாய்திருத்  தணிகை  நாதனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com