
செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
ஐவகைய கடவுளரும் அந்தனரும் பரவ
ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
உண்மையறி வானந்த உருவுடைய குருவே
சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.



