திருவருட்பா  10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை

திருத்தகுசீர்  அதிகைஅருள்  தலத்தின்  ஓங்கும் 
சிவக்கொழுந்தின்  அருட்பெருமைத்  திறத்தால்  வாய்மை 
உருத்தகுமெய்  உணர்ச்சிவடி  வாகிச்  சைவ 
ஒளிவிளங்க  நாவரசென்  றொருபேர்  பெற்றுப் 
பொருத்தமுற  உழவாரப்  படைகைக்  கொண்ட 
புண்ணியனே  நண்ணியசீர்ப்  புனித  னேஎன் 
கருத்தமர்ந்த  கலைமதியே  கருணை  ஞானக் 
கடலேநின்  கழல்கருதக்  கருது  வாயே. 
1
வாய்மையிலாச்  சமணாதர்  பலகாற்  செய்த 
வஞ்சமெலாம்  திருவருட்பேர்  வலத்தால்  நீந்தித் 
தூய்மைபெறும்  சிவநெறியே  விளங்க  ஓங்கும் 
சோதிமணி  விளக்கேஎன்  துணையே  எம்மைச் 
சேம்மைவிடா  தணிமைவிடத்  தாள  வந்த 
செல்வமே  எல்லையிலாச்  சிறப்பு  வாய்ந்துள் 
ஆய்மையுறு  பெருந்தகையே  அமுதே  சைவ 
அணியேசொல்  லரசெனும்பேர்  அமைந்த  தேவே. 
2
தேவரெலாம்  தொழுந்தலைமைத்  தேவர்  பாதத் 
திருமலரை  முடிக்கணிந்து  திகழ்ந்து  நின்ற 
நாவரசே  நான்முகனும்  விரும்பும்  ஞான 
நாயகனே  நல்லவர்க்கு  நண்ப  னேஎம் 
பாவமெலாம்  அகற்றிஅருட்  பான்மை  நல்கும் 
பண்புடைய  பெருமானே  பணிந்து  நின்பால் 
மேவவிருப்  புறும்அடியர்க்  கன்பு  செய்ய 
வேண்டினேன்  அவ்வகைநீ  விதித்தி  டாயே. 
3
விதிவிலக்கீ  தென்றறியும்  விளைவொன்  றில்லா 
வினையினேன்  எனினும்என்னை  விரும்பி  என்னுள் 
மதிவிளக்கை  ஏற்றிஅருள்  மனையின்  ஞான 
வாழ்வடையச்  செயல்வேண்டும்  வள்ள  லேநற் 
பதிமலர்த்தாள்  நிழலடைந்த  தவத்தோர்க்  கெல்லாம் 
பதியேசொல்  லரசெனும்பேர்  படைத்த  தேவே 
கதிதருகற்  பகமேமுக்  கனியே  ஞானக் 
கடலேஎன்  கருத்தேஎன்  கண்ணு  ளானே. 
4
கண்ணுளே  விளங்குகின்ற  மணியே  சைவக் 
கனியேநா  வரசேசெங்  கரும்பே  வேதப் 
பண்ணுளே  விளைந்தஅருட்  பயனே  உண்மைப் 
பதியோங்கு  நிதியேநின்  பாதம்  அன்றி 
விண்ணுளே  அடைகின்ற  போகம்  ஒன்றும் 
விரும்பேன்என்  றனையாள  வேண்டுங்  கண்டாய் 
ஒண்ணுளே  ஒன்பதுவாய்  வைத்தாய்  என்ற 
உத்தமனே  சித்தமகிழ்ந்  துதவு  வோனே. 
5
ஓங்காரத்  தனிமொழியின்  பயனைச்  சற்றும் 
ஓர்கிலேன்  சிறியேன்இவ்  வுலக  வாழ்வில் 
ஆங்காரப்  பெருமதமால்  யானை  போல 
அகம்பாவ  மயனாகி  அலைகின்  றேன்உன் 
பாங்காய  மெய்யடியர்  தம்மைச்  சற்றும் 
பரிந்திலேன்  அருளடையும்  பரிசொன்  றுண்டோ 
தீங்காய  செயலனைத்தும்  உடையேன்  என்ன 
செய்வேன்சொல்  லரசேஎன்  செய்கு  வேனே. 
6
செய்வகைஒன்  றறியாத  சிறியேன்  இந்தச் 
சிற்றுலக  வாழ்க்கையிடைச்  சிக்கி  அந்தோ 
பொய்வகையே  புரிகின்றேன்  புண்ணி  யாநின் 
பொன்னடியைப்  போற்றிலேன்  புனித  னேநான் 
உய்வகைஎவ்  வகையாது  செய்வேன்  நீயே 
உறுதுணைஎன்  றிருக்கின்றேன்  உணர்வி  லேனை 
மெய்வகையிற்  செலுத்தநினைத்  திடுதி  யோசொல் 
வேந்தேஎன்  உயிர்த்துணையாய்  விளங்குங்  கோவே. 
7
விளங்குமணி  விளக்கெனநால்  வேதத்  துச்சி 
மேவியமெய்ப்  பொருளை  உள்ளே  விரும்பி  வைத்துக் 
களங்கறுமெய்  யன்பரெல்லாங்  களிப்ப  அன்றோர் 
கற்றுணையாற்  கடல்கடந்து  கரையிற்  போந்து 
துளங்குபெருஞ்  சிவநெறியைச்  சார்ந்த  ஞானத் 
துணையேநந்  துரையேநற்  சுகமே  என்றும் 
வளங்கெழும்ஆ  கநநெறியை  வளர்க்க  வந்த 
வள்ளலே  நின்னருளை  வழங்கு  வாயே. 
8
அருள்வழங்குந்  திலகவதி  அம்மை  யார்பின் 
அவதரித்த  மணியெசொல்  லரசே  ஞானத் 
தெருள்வழங்கும்  சிவநெறியை  விளக்க  வந்த 
செழுஞ்சுடர்மா  மணிவிளக்கே  சிறிய  னேனை 
இருள்வழங்கும்  உலகியல்நின்  றெடுத்து  ஞான 
இன்னருள்தந்  தாண்டருள்வாய்  இன்றேல்  அந்தோ 
மருள்வழங்கும்  பவநெறியிற்  சுழல்வேன்  உய்யும் 
வகைஅறியேன்  நின்னருட்கு  மரபன்  றீதே. 
9
தேர்ந்தஉளத்  திடைமிகவும்  தித்தித்  தூறும் 
செழுந்தேனே  சொல்லரசாம்  தேவே  மெய்ம்மை 
சார்ந்துதிகழ்  அப்பூதி  அடிகட்  கின்பம் 
தந்தபெருந்  தகையேஎம்  தந்தை  யேஉள் 
கூர்ந்தமதி  நிறைவேஎன்  குருவே  எங்கள் 
குலதெய்வ  மேசைவக்  கொழுந்தே  துன்பம் 
தீர்ந்தபெரு  நெறித்துணையே  ஒப்பி  லாத 
செல்வமே  அப்பனெனத்  திகழ்கின்  றோனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com