திருவருட்பா  86. உள்ளப் பதிகம்

நீரார்  சடையது  நீண்மால்  விடையது  நேர்கொள்கொன்றைத் 
தாரார்  முடியது  சீரார்  அடியது  தாழ்வகற்றும் 
பேரா  யிரத்தது  பேரா  வரத்தது  பேருலகம 
ஒரா  வளத்ததொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே. 
1
மட்டுப்  படாதது  மாமறை  யாலும்  மலப்பகையால் 
கட்டுப்  படாதது  மாலா  தியர்தம்  கருத்தினுக்கும் 
தட்டுப்  படாதது  பார்முதல்  பூதத்  தடைகளினால் 
ஒட்டுப்  படாததொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே. 
2
பேதப்  படாதது  பற்பல  கற்பங்கள்  பேர்ந்திடினும் 
சேதப்  படாதது  நன்றிது  தீதெனச்  செய்கைகளால் 
ஏதப்  படாததுள்  எட்டப்  படாததிங்  கியாவர்கட்கும் 
ஓதப்  படாததொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே. 
3
தண்ணார்  அளியது  விண்ணேர்  ஒளியது  சாற்றுமறைப் 
பண்ணார்  முடிவது  பெண்ணார்  வடிவது  பண்புயர்தீக் 
கண்ணார்  நுதலது  கண்ணார்  மணியது  கண்டுகொள்ள 
ஒண்ணா  நிலையதொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே. 
4
பிறவா  நெறியது  பேசா  நிலையது  பேசில்என்றும் 
இறவா  உருவதுள்  ஏற்றால்  வருவ  திருள்அகன்றோர் 
மறவா  துடையது  மாதோர்  புடையது  வாழ்த்துகின்றோர் 
உறவாய்  இருப்பதொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே. 
5

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com