
தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.
ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.



